கடன் இல்லாத வாழ்வே நிம்மதியான வாழ்வு. அந்த நிம்மதியைத் தரக்கூடிய ஒரு அபூர்வ நேரம்தான் மைத்ர முகூர்த்தம். பிப்ரவரி 22, 2026, ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் இந்த மகா முகூர்த்தத்தில் உங்கள் கடனை அடைக்க ஒரு பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மைத்ர முகூர்த்தம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரப்படி, மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனின் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்தினால், எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அது மிக விரைவில் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
யார் எல்லாம் கடன் பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறார்களோ அவர்களுக்கு அதிலிருந்து விடுதலை தரும் காலமாக இந்த முகூர்த்த காலம் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு மாதத்தில் இரண்டு முறை இந்த முகூர்த்த காலம் ஏற்படும்.
மைத்ர முகூர்த்தம் நட்சத்திரம் மற்றும் லக்னம்
⦿ அசுவினி நட்சத்திர நாளில் மேஷ லக்ன நேரமும், ⦿ அனுஷ நட்சத்திர நாளின் விருச்சிக லக்ன நேரமும் "மைத்ர முகூர்த்தம்" எனப்படுகின்றன.
மேஷ லக்னம் - அசுவினி நட்சத்திரம்
பொதுவாகவே கடனை அடைப்பதற்கு மனம் சார்ந்த சில உந்துதல்கள், முயற்சிகள் தேவை. அசுவினி நட்சத்திரம் என்பது கேதுவுடைய நட்சத்திரம். இதில் மேஷ லக்னம் என்பது செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது. கேது பகவான் ஒரு பிரச்னையின் தீவிரத்தைக் குறைக்கக் கூடியவர். கடனை அடைக்க, உழைப்பும் முயற்சியும் தேவை. அதற்குச் செவ்வாயின் அனுக்கிரகம் தேவை. எனவேதான் கேதுவுக்கு உரிய நாளில் செவ்வாயின் ஆதிக்கம் கொண்ட மேஷ லக்ன காலத்தில் கடனை அடைப்பதன் மூலம் கேது கடன் பிரச்னைகளைக் குறைத்து அருள்புரிவார்.
விருச்சிக லக்னம் - அனுஷ நட்சத்திரம்
அதே போன்று விருச்சிக லக்னமும் செவ்வாயின் ஆதிக்கம் மிகுந்த காலம். அனுஷ நட்சத்திரம் சனிபகவானுக்குரியது. சனிபகவான் உழைப்பையும் ஊதியத்தையும் கொடுக்கக்கூடியவர். எனவே, அனுஷ நட்சத்திர நாளில் வரும் செவ்வாயின் பலம் பெற்ற விருச்சிக லக்ன நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்த கடன் பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும். குறிப்பாக உழைப்பும் நம் முயற்சியும் இணைந்து நமக்கு நவகிரகங்களின் அருளைப் பெற்றுத்தரும் என்பதுதான் இதன் தாத்பர்யம்.
பிப்ரவரி 22, 2026 - மைத்ர முகூர்த்த நேரம்:
📅 நாள்: பிப்ரவரி 22, 2026 (ஞாயிற்றுக்கிழமை) \
⏰ நேரம்: காலை 09:27 முதல் 11:14 வரை.
மார்ச் மாதம் மைத்ர முகூர்த்த நேரம்:
📅 நாள்: மார்ச் 09, 2026 (திங்கள்)
⏰ நேரம்: 11:21 PM முதல் 01:39 AMவரை.
📅 நாள்: மார்ச் 21, 2026 (சனி)
⏰ நேரம்: 07:35 AM முதல் 09:10 AM வரை.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
- இந்த முகூர்த்த நேரத்தில் உங்கள் கடன் தொகையில் ஒரு சிறு பகுதியை (அசல் அல்லது வட்டி) திருப்பிச் செலுத்துங்கள்.
- நேரடியாகத் தர முடியாவிட்டால், வங்கிக் கணக்கு மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
- அதுவும் இயலாதவர்கள், ஒரு கவரில் ஒரு தொகையை வைத்து "இந்தக் கடன் விரைவில் தீர வேண்டும்" என்று குலதெய்வத்தை வேண்டி எடுத்து வையுங்கள். பின்னர் அதனைச் செலுத்தலாம்.
"மைத்ர முகூர்த்தத்தில் கடனைத் திருப்பித் தரும்போது, அது மீண்டும் மீண்டும் கடன் வாங்கும் நிலையைத் தடுத்து, உங்கள் கர்ம வினைகளை நீக்கி செல்வத்தைப் பெருக்கும்."
அறிவியல் மற்றும் ஆன்மிகப் பார்வை
இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் பிரபஞ்ச ஆற்றல் (Cosmic Energy) கடன் நிவர்த்திக்கான அதிர்வுகளை அதிகமாகக் கொண்டிருக்கும். இந்த நேரத்தில் நாம் எடுக்கும் நேர்மறையான முயற்சிகள் பல மடங்கு பலனைத் தரும் என்பது அனுபவ பூர்வமான உண்மை.
.png)

