காஞ்சிபுரம்,பிப்.22:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீப்ரமராம்பா சமேத ஸ்ரீமல்லிகார்ஜூன சுவாமி கோயிலின் மகா கும்பாபிஷேகத்தை புதன்கிழமை நடத்தினார்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் கிராமத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீப்ரமராம்பா சமேத மல்லிகார்ஜூனசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.இக்கோயில் மகா கும்பாபிஷேகம் நிகழ் மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீகண்டி ராதாகிருஷ்ணா தலைமையில் கோயில் வைதீகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் யாகசாலை பூஜைகளை தொடங்கி நடத்தினார்கள்.கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயிலின் சிவாஜி கோபுரம் என அழைக்கப்படும் வடக்கு கோபுரமும் புதுப்பிக்கப்பட்ட தங்ககலசத்திற்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கும்பாபிஷேகத்தையொட்டி மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கோயில் நிர்வாகத்தின் அழைப்பின் பேரில் ஆந்திரமாநிலம் ஸ்ரீசைலத்துக்கு வந்து விழாவில் கலந்து கொண்டார்.
கோயிலில் ஸ்ரீமல்லிகார்ஜூன சுவாமியின் மூலவர் கோபுர உச்சிக்கு சென்று புனித நீரை தெளித்து மகா கும்பாபிஷேகம் செய்தார். இதனைத் தொடர்ந்து மூலவர் மல்லிகார்ஜூனசுவாமி மற்றும் ஸ்ரீபிரம்மராம்பா உள்ளிட்ட மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகங்களையும், தீபாரதனைகளையும் நடத்தினார்.
கும்பாபிஷேக விழாவில் ஆந்திர மாநில துணை முதûமைச்சரும்,அறநிலையத்துறை அமைச்சருமான கோட்டு சத்யநாராயணா,அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீசத்ய நாராயணா,கோயில் செயல் அலுவலர் பெத்தராஜூ,ஸ்ரீபுஷ்பகிரி சுவாமிகள் மற்றும் ஸ்ரீசைல பீடத்தின் சுவாமிகள் ஆகியோரும் உடன் இருந்தனர். கும்பாபிஷேக நிகழ்வுகளை அறநிலையத்துறை ஆலோசகரான ஸ்ரீசக்கரபாணி தொகுத்து வழங்கினார்.
கும்பாபிஷேக விழாவில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தனது ஆசியுரையில் ஜெகத்குரு ஆதிசங்கராசாரியார் ஸ்ரீசைலத்திற்கு யாத்திரையாக சென்று அங்குள்ள காடுகளில் எப்படி தவம் செய்திருப்பார் என்பது வியப்பாக உள்ளது.1933 ஆம் ஆண்டு காஞ்சி மகா பெரியவர் சுவாமிகள் வருகை தந்ததையும் அப்போது இப்பகுதியில் உள்ள செஞ்சு பழங்குடியினர் மகா சுவாமிகளுக்கு வரவேற்பு அளித்ததையும் நினைவு கூர்ந்தார்.அது மட்டுமின்றி 1967 ஆம் ஆண்டு மகா பெரியவர் சுவாமிகளும்,ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பாதயாத்திரையாக ஸ்ரீசைலம் வந்ததையும் நினைவு கூர்ந்தார்.
படவிளக்கம் : ஸ்ரீ சைலம் மூலவர் கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் செய்யும் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்