காஞ்சிபுரம்,ஏப்.2:
பக்தியோடு இணைந்த கல்வி மிக அவசியம் என காஞ்சிபுரம் சங்கர மடத்தில் தன்னை சந்திக்க செவ்வாய்க்கிழமை வந்திருந்த ஜெயின் துறவியர்களிடம் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசினார்.
ஜெயின் துறவியர்கள் கவேஷ்ணாஜி,மேரு பிரபாஜி,தஷபிரபாஜி,மயங்க் பிரபாஜி உள்ளிட்ட 4 பெண் துறவியர்கள் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்திருந்தனர்.
இவர்கள் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து இந்து மதத்தினரும்,ஜெயின் மதத்தினரும் இணைந்து மரக்கன்றுகள் நடுதல்,மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்தல், சைவ உணவின் நன்மைகளை எடுத்துக் கூறுதல்,பசுமாடுகளை பாதுகாத்தல், போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியன தொடர்பாக இணைந்து செயல்படுவது குறித்து கலந்துரையாடினார்கள்.
இந்தியா முழுவதும் 705 ஜெயின் துறவியர்கள் இது குறித்து பிரச்சாரம் செய்து வருவதாகவும் துறவியர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசுகையில்,
இன்றைய நிலையில் பக்தியோடும்,இயற்கையோடும் இணைந்த கல்வி மிக அவசியமாகிறது. பக்தியோடு கலந்த கல்வியை கற்றுத் தரும்போது குடும்ப மண முறிவுகள் ஏற்படாது,இளைஞர்கள் தீய பழக்க வழக்கங்களுக்கு செல்ல மாட்டார்கள்.
தீவிரவாதம் மறைந்து சகோதரத்துவம் வளரும், முக்கியமாக இளைஞர்களின் எதிர்காலம் நன்றாகி சிறந்த தேசம் உருவாகும்.எனவே பக்தியோடு இணைந்த கல்வியால் மட்டுமே மனிதர்களை புனிதர்களாக மாற்றலாம் என்றும் பேசினார்.
கலந்துரையாடலின் போது காஞ்சிபுரம் மாவட்ட ஜெயின் சங்க நிர்வாகிகள் டி.மோதிலால்,ப.இந்தர்ஜித்,கிஷோர்குமார், ராஜேஷ் ஆகியோரும் உடன் இருந்தனர்.