காஞ்சிபுரம், ஆக.18:
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அன்னை ரேணுகாம்பாள் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் பால்க்குடம் எடுத்து வந்து அவர்களது கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்தனர்.
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் கோயில். இக்கோயில் ஆடித்திருவிழா நிகழ் மாதம் 10 ஆம் தேதி சனிக்கிழமை தொடங்கியது.
முதல் நாளில் அம்மன் மாயக்கிருஷ்ணன் அலங்காரத்தில் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து தினசரி மூலவர் அன்னை ரேணுகாம்பாள் தினசரி வெவ்வேறு அலங்காரத்திலும்,தினசரி இரவு பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
நிகழ் மாதம் 17 ஆம் தேதி சனிக்கிழமை அம்மன் புற்றுமாரியம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதன் தொடர்ச்சியாக 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தர்கள் காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இருந்து பால்க்குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அன்னை ரேணுகாம்பாள் ஆலயம் வந்து சேர்ந்தனர்.பின்னர் மூலவர் அன்னை ரேணுகாம்பாளுக்கு பக்தர்கள் தங்களது கரங்களாலேயே பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
கூழ்வார்த்தல், ஊரணிப் பொங்கல் நிகழ்வுகளும் நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானமும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்ப்டடது.
மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும்,கும்பப் படையல் நிகழ்வும் நடைபெற்றது. ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.