காஞ்சிபுரம், மார்ச்.6:
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வருடாந்திர பிரமோற்சவத்தின் மூன்றாம் திருநாளையொட்டி புதன்கிழமை இரவு வெள்ளை யானை வாகனத்தில் உற்சவர் காமாட்சி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் திருக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 3 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவையொட்டி தினசரி காலையிலும்,மாலையிலும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வருகிறார்.
விழாவின் மூன்றாவது நிகழ்ச்சியாக புதன்கிழமை காலையில் தங்க சிம்ம வாகனத்திலும், மாலையில் வெள்ளையானை வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் சங்கர மடம் முன்பாக ஏசல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,ஸ்ரீ காரியம் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி ஆகியோர் காமாட்சி அம்மனை வரவேற்கும் வைபவம் நடைபெற்றது.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவையொட்டி காமாட்சி அம்மன் ஆலயம் முன்பாக காஞ்சி காமாட்சி விஸ்வரூப தரிசன சபா சார்பில் அதன் தலைவர் குமார் சார்பிலும்,சங்கர மடம் அருகில் காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு சார்பி அதன் ஒருங்கிணைப் பாளர் காஞ்சி.ஜீவானந்தம் சார்பிலும் அன்னதானம் நடைபெற்றது.சங்கர மடத்தில் நடைபெற்ற ஏசல் நிகச்சிக்குப் பிறகு அம்மன் ராஜவீதிகளின் வழியாக ஆலயம் வந்து சேர்ந்தார்.
மார்ச்.9 ஆம் தேதி தேரோட்டமும்,மார்ச்.11 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரோட்டமும் நடைபெறுகிறது.