காஞ்சிபுரம், ஜூன்.5:
காஞ்சிபுரம் மாநகரில் பெரியகாஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது காமாட்சி அம்பிகை சமேத செவ்வந்தீஸ்வரர் கோயில்.வாயு தேவன் தன் சாபம் நீங்கிய பிறகு செவ்வந்தி மலர்களைக் கொண்டு பூஜை செய்ததால் இங்குள்ள சிவபெருமான் செவ்வந்தீஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார்.
காஞ்சிபுரத்தில் செவ்வாய் தோஷ பரிகார ஆலயமாகவும் இருந்து வருவது இந்த ஆலயத்தின் தனிச்சிறப்பாகும்.இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் முழுவதும் புதுப்பிக்கப்பட்டும், மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களும் புதிய சிலைகளாக பிரதிஷ்டை செய்யப்பட்டும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
யாகசாலை பூஜைகள் கே.ஆர்.மகேஷ் சிவாச்சாரியார் தலைமையில் 30 சிவாச்சாரியார்கள் 11 ஹோம குண்டங்களில் யாகசாலை பூஜைகளை நிகழ் மாதம் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கினார்கள்.
மறுநாள் புதன்கிழமை புதிய சுவாமி சிலைகள் ஊர்வலமும்,யந்திரஸ்தாபனம்,சிலைகள் பிரதிஷ்டை ஆகியனவும் நடைபெற்றது. வியாழக்கிழமை காலையில் மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் புறப்பட்டு சிவாச்சாரியார்களால் ராஜகோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவருக்கும்,பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும்,பின்னர் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அறங்காவலர் கே.எஸ்.கெம்பு செட்டியார் தலைமையிலான விழாக்குழுவினர் செய்திருந்தனர்.