காஞ்சிபுரம், மார்ச் 03:
சுவாமி எழுந்தருளல்:
அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி, ஆண்டுதோறும் மாசி மகத்தன்று ராஜகுளம் கிராமத்திற்கு எழுந்தருள்வது வழக்கம். அந்த வகையில், இன்று அதிகாலையில் கோயிலிலிருந்து புறப்பட்ட வரதராஜ சுவாமி, வழியில் உள்ள:
- திருவீதிப்பள்ளம்
- செட்டியார்குளம்
- வையாவூர்
- சிட்டியாம்பாக்கம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். பின்னர் மாலை வேளையில் ராஜகுளம் கிராமத்தை வந்தடைந்தார்.
தெப்ப உற்சவம்:
ராஜகுளம் கிராமத்தில் சுவாமிக்குச் சிறப்புத் திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. தொடர்ந்து, வண்ண மின்விளக்குகள் மற்றும் விதவிதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட தெப்பத்தில், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் வரதராஜ சுவாமி எழுந்தருளினார்.
திருக்குளத்தில் இந்தத் தெப்பம் 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தது. அப்போது வானைப் பிளக்கும் வகையில் அதிரடி வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. ராஜகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குளக்கரையில் திரண்டு நின்று கோவிந்தா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ராஜகுளம் கிராம மக்கள் இணைந்து செய்திருந்தனர். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் வாலாஜாபாத் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
.png)