காஞ்சிபுரம், ஜூன் 25:
அயோத்தி ராமர் கோயிலுடன் தொடர்புடைய 'ஸ்ரீராம யந்திரம்'
பெரியகாஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத் பிரமேந்திர மடத்தின் ஒரே வளாகத்தில் அகஸ்தீஸ்வர சுவாமி, ஹயக்ரீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி மற்றும் பக்த ஹனுமன் ஆகிய சந்நிதிகள் அமைந்துள்ளன.
இக்கோயிலின் மிக முக்கிய ஆன்மீகச் சிறப்பம்சமாக, இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல யோகிகளால் சின்னச்சின்ன அக்சரங்களால் (எழுத்துக்களால்) செதுக்கப்பட்ட 'ஸ்ரீராம யந்திரம்' இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த யந்திரத்தின் வடிவமைப்பு மாதிரியே உருவாக்கப்பட்டு, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் போது காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள மூலவர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
மகா கும்பாபிஷேகம் மற்றும் கல்வெட்டு திறப்பு
இத்தகைய பெருமை வாய்ந்த இக்கோயில் வளாகம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு, ஜூன் 24-ஆம் தேதி கோ பூஜை, விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை சடங்குகள் தொடங்கின.
வியாழக்கிழமை காலையில் இறுதி கட்ட யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்களால் புனித நீர்க்குடங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கக் கோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த உன்னதக் குடமுழுக்கு விழாவை முன்னின்று நடத்தி வைத்தார்.
விழாவில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோபுர தரிசனம் செய்த பின்னர் சந்நிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, கோயில் கும்பாபிஷேகம் தொடர்பான புதிய கல்வெட்டு ஒன்றினையும் அவர் திறந்து வைத்தார். மேலும், இந்த ஆலயத்தின் திருப்பணிகளைப் பழமை மாறாமல் செதுக்கிய சிறந்த கட்டிடக் கலைஞர்களைப் பாராட்டி, அவர்களுக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
காமாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு
கும்பாபிஷேக விழாவிற்கு முன்னதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று உலக நன்மைக்காகச் சிறப்பு சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த விழாவிற்கான அனைத்து விரிவான ஏற்பாடுகளையும் சங்கர மடத்தின் முதன்மைச் செயலாளர் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளர் ந.சுந்தரேச ஐயர் மற்றும் மேலாளர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோர் இணைந்து மிக நேர்த்தியாகச் செய்திருந்தனர்.
