காஞ்சிபுரம் | ஜூலை 12, 2026
பஞ்சபூதத் தலங்களில் ‘நிலத்திற்குரிய’ தலமாகப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில், இந்தியாவிலேயே முதல் முறையாக வடிவமைக்கப்பட்டுள்ள 25 அடி உயரப் பிரம்மாண்ட புதிய தங்கத் தேரின் ஓட்டத் திருவிழா இன்று (12.07.2026) ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாகலமாகத் தொடங்கியது.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில் தமிழக அமைச்சர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு, தங்கத் தேரினை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தனர்.
அமைச்சர்கள், கலெக்டர் முன்னிலையில் தேரோட்டம்:
இன்று மாலை 7 மணி அளவில் நடைபெற்ற இந்தத் தங்கத்தேர் தொடக்க விழாவில்:
- மாண்புமிகு வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் திரு. எஸ்.பி.கே.தென்னரசு,
- மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சீ.ரமேஷ், மற்றும்
- மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு. ஆர்.வீ.இரஞ்சித்குமார்
ஆகிய மூவரும் இணைந்து பக்தி முழக்கங்களுக்கு இடையே கொடியசைத்துத் தேரோட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. தி.சினேகா, இ.ஆ.ப., நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ரூ.30 கோடியில் உருவான 25 அடி உயரத் தங்கத்தேர்:
ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை மற்றும் பக்தர்களின் பங்களிப்புடன் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில், அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் 25 அடி உயரம், 13 அடி நீளம், 10 அடி அகலத்தில் இந்தத் தங்கத்தேர் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் இந்த புதிய தங்கத் தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து, 108 நாதஸ்வர வித்வான்களின் மங்கள இசை, 1,000 சிவனடியார்களின் சிவ வாத்திய முழக்கங்கள் மற்றும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய ராஜவீதிகளில் இந்தத் தங்கத்தேர் பவனி முதன்முறையாக வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தது.
