ராகு-கேது பெயர்ச்சி 2026: சிறப்பு முன்னுரை
ஜோதிட சாஸ்திரத்தின்படி, காலச்சக்கரத்தின் மிக முக்கியமான திருப்பங்களை நிகழ்த்தும் நிழல் கிரகங்களான ராகு மற்றும் கேதுவின் இடப்பெயர்ச்சி என்பது ஒட்டுமொத்த ராசிகளுக்கும் ஒரு புதிய பரிமாணத்தையும், கர்மவினை மாற்றங்களையும் தரக்கூடிய மாபெரும் நிகழ்வாகும்.
துல்லியமான பெயர்ச்சி நேரம்: திருக்கணிதப் பஞ்சாங்கப்படி, டிசம்பர் 5, 2026, இரவு 10:32 மணிக்கு இந்தப் பெயர்ச்சி நிகழ்கிறது.
ராகு மற்றும் கேது ஏறக்குறைய 18 மாதங்களுக்கு ஒருமுறை (அதாவது ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை) ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார்கள். இவை எப்பொழுதும் பின்னோக்கி (வக்ர கதியில்) மட்டுமே பயணிக்கும் நிழல் கிரகங்களாகும். சொந்த ராசி வீடுகள் இல்லாத இந்த இரண்டும், தாங்கள் அமரும் ராசி அதிபதியின் தன்மையைப் பொறுத்தும், தங்களை இயக்கும் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் தொடர்பைப் பொறுத்தும் மனித வாழ்வில் எதிர்பாராத திருப்பங்களையும், ஆன்மீக மற்றும் லௌகீக மாற்றங்களையும் பரிசளிக்கின்றன.
இந்த ராகு-கேது பெயர்ச்சியானது மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிக்காரர்களின் வாழ்வில் கல்வி, தொழில், வியாபாரம், பொருளாதாரம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதை இந்தப் பகுப்பில் விரிவாகக் காணலாம்.
கடக ராசி ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2026 - 2028
எதையும் சாதிக்க வேண்டுமென்ற துடிப்புடன் செயல்படும் கடக ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் இடத்தில் இருந்த கேது பகவான் இனி உங்கள் ஜென்ம ராசியிலும், அட்டம ஸ்தானமான 8-ஆம் இடத்தில் இருந்த ராகு பகவான் களத்திர ஸ்தானமான 7-ஆம் இடத்திலும் சஞ்சரிக்க உள்ளனர்.
"தடைகளையும், மன உளைச்சலையும் தந்து வந்த பழைய நிலை மாறி, இனி நம்மாலும் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையைப் பெறுவீர்கள்."
பொதுப்பலன்கள் மற்றும் கிரக இணைவுகள்
இந்தப் பெயர்ச்சியில் காரியங்களை மிகுந்த தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் செய்து முடிப்பீர்கள். உங்கள் எண்ணங்களைத் தயக்கமின்றி வெளிப்படுத்துவீர்கள். அவசியமற்ற செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்புகளை உயர்த்திக் கொள்வீர்கள். சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்கிற பழமொழிக்கேற்ப அனைவரிடமும் பக்குவமாகப் பேசிப் பழகி உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வது நல்லது. புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும்.
உங்கள் நிர்வாக ஆற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பு தானாகவே கிடைக்கும். சுறுசுறுப்புடன் இயங்குவீர்கள். சிலருக்கு வேறு ஊருக்கு மாற்றலாகிச் சென்று வசிக்கும் யோகமும் உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். அதேநேரம் எல்லாம் சரியாக நடந்து விடும் என்று அலட்சியமாக இருந்தால் தோல்வியைச் சந்திக்க நேரிடும்.
துவக்கத்தில் ஜென்ம ராசியில் கேது பகவான் குருவுடன் இணைவு பெறுவது சிறந்த பலனைப் பெற்றுத் தரும். கடந்த 20-10-2026 முதல் தனஸ்தானத்தில் கேது குருவோடு இணைந்து பெற்ற பொருளாதார வளர்ச்சி, கேது ராசிக்கு வந்த பிறகும் முதல் ஆறு மாத காலத்திற்குத் தொடரும். அதன்பின்பு பூசம் நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கும் எட்டு மாத காலம் சற்று கடினமாக இருக்கலாம். எதுவும் நிரந்தரமில்லை என்ற மனப்பக்குவத்துடன் செயல்பட்டால் பொருளாதார இழப்புகளைத் தவிர்க்கலாம்.
லாப ஸ்தானத்தைக் கேது பார்வையிடுவதால் உங்கள் அறிவாற்றல் ஊக்கமளித்து நன்மை தரும். மூன்றாமிடத்தைக் கேது பார்ப்பது உங்கள் முயற்சிகளுக்கு வெற்றியைப் பெற்றுத் தரும். குரு பார்வை ராகுவுக்கு இருப்பதால் நீண்ட நாள் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் சுப காரியங்கள் கைகூடும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தைப் பார்வையிடுவதால் புனித யாத்திரைகள் சென்று வருவீர்கள். நதி மற்றும் கடல் கடந்து வெளிநாடுகளில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தை ராகு பார்ப்பதால் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
அலுவலகப் போக்கில் மிகத் திருப்திகரமான பலன்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்றாலும், பெரும் சங்கடங்கள் எதுவும் ஏற்படாது என்ற அளவில் ஆறுதலடையலாம். உங்கள் பணிகளில் மிகுந்த அக்கறையுடன் செயல்படுவது அவசியம். அரசுப் பணியில் இருப்பவர்களுக்குப் பெரும் சிக்கல்கள் இராது. தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்குப் பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டுப் பிறகு நிவர்த்தியாகும். சக பணியாளர்களுடன் சுமூகமாக நடந்து கொள்வதன் மூலம் பணிப்பளுவைக் குறைத்துக் கொள்ள முடியும். எதிர்பாராத இடமாற்றங்களால் சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரலாம்.
வியாபாரிகளுக்கு
வாடிக்கையாளர்களின் தொடர்ச்சியான ஆதரவு இருக்கும் வகையில் செயல்படுவது முதல் தேவையாகும். கொள்முதல் செய்யும் போது தரமான பொருட்களை மட்டுமே தேவைக்கேற்ப அவ்வப்போது வாங்குவது சிறந்தது. மொத்தமாக வாங்கி அதிக அளவில் இருப்பு வைப்பதைத் தவிர்ப்பதன் மூலம் பெரும் விரயங்களைத் தடுக்கலாம். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படாது என்பதால் கவலை வேண்டாம். பணம் புழங்கும் இடங்களில் நம்பிக்கையானவர்களை அமர்த்துவதும், உங்கள் நேரடிக் கண்காணிப்பும் அவசியம்.
"ஆன்லைன் வர்த்தகத்தில் குறுகிய கால முதலீடுகளை மட்டும் மேற்கொண்டு, லாபம் வந்தவுடன் மாற்றுவது நிச்சய வெற்றியைத் தரும்."
போட்டி நிறுவனங்களின் எதிர்ப்புகளைச் சமயோஜித புத்தியினால் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் வர்த்தக விரிவாக்கம் சிறப்பாக நடக்கும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முதலீடுகளுக்காகக் கடன் வாங்கும் சூழல் உருவாகும்.
கலைத்துறையினருக்கு
தொடர்ச்சியான முயற்சிகளால் மட்டுமே புதிய வாய்ப்புகளைப் பெற முடியும் என்பதால் சோர்வுக்கு இடம் கொடுக்காமல் நீங்களே நேரடியாகச் சென்று வாய்ப்புகளைத் தேடுவது வெற்றி தரும். சக கலைஞர்களைப் பகைத்துக் கொள்ளாமல் சுமூகமாகப் பழகுவது அவசியம். நடனம், ஸ்டண்ட் போன்ற துறைக் கலைஞர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறுவார்கள். வெளியூர்ப் பயணங்களின் போது கவனம் தேவை. புதிய படங்களுக்கான வாய்ப்புகள் சிலருக்குக் கிடைக்கக்கூடும்.
மாணவர்களுக்கு
விளையாட்டு போன்ற துறைகளில் ஆர்வம் இருந்தாலும் படிப்பில் அதிக அக்கறை செலுத்துவது அவசியம். மின்னணுத் துறை கல்வியில் சிலர் சிறப்பான வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஜாதகப்படி தசாபுத்தி பலன்கள் பலமாக இருப்பவர்களுக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பு சாத்தியமாகும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்து விடுதிகளில் தங்கிப் படிக்க நேரலாம். அரசின் கல்விச் சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படக்கூடும்.
அரசியல்வாதிகளுக்கு
உங்களுக்குத் தரப்பட்டுள்ள பொறுப்புகளைத் திறம்பட நிறைவேற்றித் தலைமையின் பாராட்டுகளைப் பெறக் கடின உழைப்பு தேவைப்படும். மாற்று முகாம்களுக்குத் தாவும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் உறுதியான விசுவாசத்துடன் இருப்பதே எதிர்கால நன்மைகளுக்கு வழிவகுக்கும். பொறுமையாகப் பணியாற்றினால் தொண்டர்களின் ஆதரவுடன் சிலர் மிகப்பெரும் பொறுப்பான பதவிகளைப் பெற்று மகிழ்வார்கள்.
பெண்களுக்கு
இதுவரை தள்ளிப்போய் வந்த திருமணம் இனிதே நிறைவேறும். மறைமுக சேமிப்புகள் மூலம் சேரும் பணம், உங்கள் கணவரின் பணத் தட்டுப்பாட்டை நீக்கத் தக்க சமயத்தில் உதவும். பூர்வீகச் சொத்து மூலம் சிலருக்குத் தனவரவு உண்டாகும். வேலை காரணமாகப் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். தேவையற்ற மனக்குழப்பங்களைத் தவிர்த்து, வயிற்றுக் கோளாறு போன்ற சிறு உபாதைகள் தோன்றும்போதே சிகிச்சை பெறுவது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்கள் சரியான நேரத்திற்கு உணவு உண்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
நட்சத்திரப் பலன்கள்
புனர்பூசம் 4-ஆம் பாதம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்றமும் இறக்கமும் கலந்த நிலையே காணப்படும். தொழில், வியாபாரத்தில் உடனடிப் பெரும் ஆதாயங்களை எதிர்பார்க்க முடியாது. குடும்ப நிலையிலும் சற்று நிம்மதி குறைந்து காணப்படலாம். சுபநிகழ்ச்சி தொடர்பான முயற்சிகளில் தடங்கலுக்குப் பிறகு வெற்றி கைகூடும். மனச்சோர்வுக்கு இடம் கொடுக்காமல் இறைவழிபாட்டின் மூலம் மன அமைதி காணலாம்.
பூசம்
நிதானமான மனப்போக்கு மிகவும் தேவை. சகோதர வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு மறையும். குடும்பத்தினரிடம் மனக்கசப்பு ஏற்படும் சூழல் வந்தாலும் அது தற்காலிகமானதே என்பதால் துணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுங்கள். தொழில், வியாபாரத்தில் அகலக்கால் வைக்காமல் இருப்பது உத்தமம். இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மை தரும்.
ஆயில்யம்
நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் மாறிமாறி வரும் என்பதால் எந்த முயற்சியிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துத் திட்டமிட்டுச் செயல்படுவது அவசியம். பணியாளர்களிடம் கனிவாக நடந்து கொள்வதன் மூலம் தொழில் பிரச்சினைகளைக் குறைக்கலாம். அரசு வழியில் சிலருக்குச் சிக்கல்கள் ஏற்பட இடமுண்டு. கண் தொடர்பான உபாதைகள் சிகிச்சைக்குப் பின் குணமாகும். சிலருக்குத் திடீர் தனவரவும், வாகனப் பழுதுபார்ப்புச் செலவுகளும் ஏற்படலாம். நெருப்பு அருகில் பணிபுரிபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
பரிகாரம் மற்றும் அதிர்ஷ்ட குறிப்புகள்
துர்க்கை அம்மன் வழிபாடு எல்லாத் துன்பங்களையும் போக்கி எதிர்பார்த்த காரிய வெற்றியைத் தரும். பௌர்ணமி நாட்களில் அம்மன் ஆலயம் சென்று நெய் தீபமேற்றி, நவகிரக ராகு மற்றும் கேது பகவானுக்குச் செவ்வரளிப் பூ சாற்றி வேண்டிக் கொள்ள சகல காரியங்களும் நன்மையில் முடியும்.
தினசரி மந்திரம்: “ஓம் ஸ்ரீகர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை உச்சரிக்கவும்.
- அதிர்ஷ்ட எண்கள்: 2, 3, 7
- அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறையில் ஞாயிறு, திங்கள், வியாழன்; தேய்பிறையில் ஞாயிறு, திங்கள்.

