Type Here to Get Search Results !

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்!

நட்சத்திர மண்டலத்தில் ஆறாவது நட்சத்திரமாக இருப்பது திருவாதிரை. 27 நட்சத்திரங்களில் 'திரு' என்ற சிறப்புடன் அழைக்கப்படும் இரண்டு நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் இது. இரண்டாவது நட்சத்திரம் திருவோணம். ஒன்று சிவபெருமானின் நட்சத்திரம்; மற்றொன்று திருமாலுக்கானது. இந்த நட்சத்திரத்தின் ராசி மிதுனம். மிதுனம் என்பது இரட்டையைக் குறிக்கும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒட்டியும் பேசுவார்கள்; வெட்டியும் பேசுவார்கள். ஒரு கருத்துக்கு ஆதரவும் தெரிவிப்பார்கள்; அதே கருத்தை மற்றொரு சமயம் மறுத்தும் பேசுவார்கள்.


`இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் யாரும் சோடை போனதில்லை’ என்று ஜாதக அலங்காரம் என்ற நூல் கூறுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எப்படியும் பிரபலமான நிலையை அடைந்துவிடுவீர்கள். வீடு, மனை, நிலம் போன்றவை வாங்குவதிலும் விற்பதிலும் திறமை பெற்றிருப்பீர்கள். சற்று முன்கோபம் கொண்டிருப்பீர்கள். சூழ்நிலைக்கு ஏற்றபடி நடந்துகொள்வதால் உங்களுக்கு விரோதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். கோபமோ, சந்தோஷமோ உடனே வெளிப்படுத்திவிடுவீர்கள். பார்ப்பதற்கு பலாப்பழம்போல் கடினமாகக் காணப்பட்டாலும், பலாப்பழச் சுளைகளைப்போல் இனிமையானவர்கள். உங்களை நம்பியவர்களை எந்தக் காலத்திலும் கைவிட மாட்டீர்கள். தெரியாத விஷயத்தைக்கூட தெரிந்ததுபோல் பேசுவீர்கள்.  உங்களால் முடிந்த அளவுக்கு உதவி செய்வீர்கள். அதேநேரம் சற்று சுயநலத்துடனும் நடந்துகொள்வீர்கள். மிகுந்த அறிவுத்திறன் பெற்றிருப்பீர்கள்; எடுத்த காரியத்தை எப்படியும் முடித்துக்காட்டுவீர்கள். உங்கள் திறமையின் மீது சற்று கர்வம்கொண்டிருப்பீர்கள். சமயங்களில் நீங்கள் பொய் சொன்னாலும்கூட, அது மற்றவர்களின் நன்மைக்காகவே இருக்கும். அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். 


ஒருவர் சொல்லும் விஷயத்தை உடனே கிரகித்துக்கொள்வீர்கள். படிக்கும் காலத்திலும்கூட ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தும் பாடங்களை உடனே புரிந்துகொண்டு கிரகித்துக்கொள்வீர்கள். எனவே, மற்றவர்களைப்போல் கஷ்டப்பட்டு படிக்க மாட்டீர்கள். கடைசி நேரத்தில்தான் பாடங்களை ஒருமுறை புரட்டிப் பார்ப்பீர்கள். ஆனால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுவிடுவீர்கள். கற்பனை வளம் அதிகமிருக்கும். வாழ்க்கைத்துணையை அதிகம் நேசிப்பீர்கள். வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும் என்று நினைப்பீர்கள். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். இளம்பருவத்திலிருந்தே குடும்பப் பொறுப்புகளை ஏற்றிருப்பீர்கள். உறவினர்களையும் நண்பர்களையும் அன்புடன் உபசரிப்பீர்கள். எப்போதும் உறவினர்கள் சூழ்ந்திருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள். ஆன்மிகத்தில் அதிக நாட்டம்கொண்டிருப்பீர்கள். பல திருத்தலங்களைத் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றிருப்பீர்கள்.


இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...


திருவாதிரை 1-ம் பாதம்

  • நட்சத்திர அதிபதி - ராகு; 

  • ராசி அதிபதி - புதன்; 

  • நவாம்ச அதிபதி - குரு

ஆசார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிப்பீர்கள். எதிலும் ஒழுங்கையும் நேர்மையையும் விரும்புவீர்கள். புதிதாகப் பார்ப்பவர்களிடம்கூட பல காலம் பழகியவரைப்போல் எளிதில் நட்பு கொண்டுவிடுவீர்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்ற ரீதியில் மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள்.  நீங்கள் இருக்குமிடத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பீர்கள். சிலர் வேத சாஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவராக விளங்குவீர்கள். தன் வயதையொத்தவர்களைவிட, வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்களின் நட்பையே அதிகம் பெற்றிருப்பீர்கள். பிற மொழிகளில் அதிக ஈடுபாடுகொண்டிருப்பீர்கள். இயல்பிலேயே முரட்டுத்தனம் பெற்றிருப்பீர்கள். உறுதியான தெய்வநம்பிக்கை கொண்டிருப்பீர்கள். சிறந்த பேச்சாளர்களாக விளங்குவீர்கள். பட்டிமன்றம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்துகொண்டு பிரபலமடைவீர்கள். ஆன்மிகத் துறையில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள். ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் புகழும் பணமும் ஈட்டுவீர்கள். திருமணத்துக்குப் பிறகு வாழ்க்கைத்துணையை மிகவும் நேசிப்பீர்கள். வயதானாலும் குழந்தைகளுடன் விளையாடுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். 


திருவாதிரை 2-ம் பாதம்


  • நட்சத்திர அதிபதி - ராகு; 

  • ராசி அதிபதி - புதன்; 

  • நவாம்ச அதிபதி - குரு


மிகவும் பொறுமைசாலிகளாக இருப்பீர்கள். சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். எந்த நெருக்கடியான சூழ்நிலையிலும் விதிகளை மீற மாட்டீர்கள். சிறு வயதில் கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பீர்கள். பெரும்பாலும் தனிமையில் இருப்பதையே விரும்புவீர்கள். அவ்வளவு சுலபத்தில் மற்றவர்களுடன் பழகிவிட மாட்டீர்கள். பேசுவதில் பொறுமையைக் கடைப்பிடிப்பீர்கள். இன்பமோ, துன்பமோ எதுவானாலும் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டீர்கள். விளையாட்டுகளில் ஆர்வமும், தான் சார்ந்திருக்கும் அணியின் வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணமும்கொண்டிருப்பீர்கள். நவாம்ச அதிபதியாக சனி இருப்பதால், பொறுமையுடனிருந்து காரியத்தைச் சாதித்துக்கொள்வீர்கள். பேசும்போது சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு படபடப்பாகப் பேசி, மற்றவர்களின் மன வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பேசும்போது கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. 


திருவாதிரை 3-ம் பாதம்

  • நட்சத்திர அதிபதி - ராகு; 

  • ராசி அதிபதி - புதன்; 

  • நவாம்ச அதிபதி - சனி

மூன்றாம் பாதத்துக்கு நவாம்ச அதிபதி சனி என்பதால், ஏமாற்றங்களை அதிகம் சந்திப்பீர்கள். நம்பிக்கை துரோகிகளால் மனவருத்தம் அடைவீர்கள். சிறு வயதிலிருந்தே கஷ்டங்களை அதிகம் சந்தித்திருப்பீர்கள் என்பதால்,  பண்பட்ட மனம்கொண்டவராக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களை இழிவாகப் பேசினால் தக்க முறையில் அவர்களுக்குப் பாடம் புகட்டுவீர்கள். தெய்வ நம்பிக்கையும், தெய்வ அனுக்கிரகத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற எண்ணமும் கொண்டிருப்பீர்கள். சித்தர்கள், ஆன்மிக அறிஞர்கள் போன்றவர்களைப் பற்றி அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் சண்டைகளைக் காண்பதில் விருப்பம் பெற்றிருப்பீர்கள். உடன் பிறந்த சகோதரர்களைவிட சகோதரிகளே அதிகம் உதவி செய்வார்கள். மூலிகைகள் பற்றி அறிந்துகொள்வதிலும், மூலிகைகளைத் தேடி அலைவதிலும் அலாதி பிரியம் கொண்டிருப்பீர்கள். மற்றவர்கள் உங்கள் மனதிலுள்ளதை புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அழுத்தமான ஆளாக இருப்பீர்கள்.


திருவாதிரை - 4-ம் பாதம்

  • நட்சத்திர அதிபதி - ராகு; 

  • ராசி அதிபதி - புதன்; 

  • நவாம்ச அதிபதி - குரு


இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் தெய்வ அருள் நிரம்பப் பெற்றவர்களாக இருப்பீர்கள். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். அநியாயம் கண்டு சினம்கொள்வீர்கள். கொடுமை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அடக்கி ஒடுக்கப் பார்ப்பீர்கள். மக்களுக்கு சேவை செய்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். விவாதங்களில் எப்போதும் நீங்களே வெற்றி பெறுவீர் கள். புண்ணியத் தலங்களுக்கு அடிக்கடி யாத்திரை மேற்கொள்வீர்கள். அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பீர்கள். இந்தப் பாதத்தில் பிறந்த நீங்கள் பத்திரிகைத் துறை, ஊடகத் துறை போன்றவற்றிலும் பிரபலமாகத் திகழ்வீர்கள். அனைவருடனும் பழகிவிட மாட்டீர்கள். உயர்ந்த பதவி வகித்தாலும், தவறான வழிக்குச் சென்று பொருள் சேர்க்க விரும்ப மாட்டீர்கள். பெற்றோரிடமும் பிள்ளைகளிடமும் அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருப்பீர்கள். பிள்ளைகள் தவறான வழிக்குச் செல்ல அனுமதிக்க மாட்டீர்கள். சமைத்த உணவைவிட இயற்கை உணவில் பிரியம் கொண்டிருப்பீர்கள். 

  • வழிபடவேண்டிய தெய்வம்:  துர்கை, மகாவிஷ்ணு
  • அணியவேண்டிய நவரத்தினம் - கோமேதகம்
  • வழிபடவேண்டிய தலம்: சிதம்பரம், பட்டீஸ்வரம்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.