காஞ்சிபுரம்,ஏப்.22:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் சித்திரை உத்திரப் பெருவிழாவையொட்டி தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பெருமாள் ஆமை வடிவத்தில் சிவனை வணங்கிய பெருமைக்குரியதாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள சுந்தராம்பிகை சமேத கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயில் சித்திரை உத்திரப் பெருவிழா நிகழ் மாதம் 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நிகழ் மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 7 வது நாள் நிகழ்ச்சியாக மகாரதம் என்னும் தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சுந்தராம்பிகையும், கச்சபேசுவரரும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தவாறு நகரின் ராஜவீதிகளில் பவனி வந்தனர்.
வரும் 25 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும்,27 ஆம் தேதி பஞ்சமூர்த்திகள் உற்சவமும் நடைபெறுகிறது. வரும் மே மாதம் 3 ஆம் தேதி புஷ்பப்பல்லக்கில் சுவாமி வீதியுலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை காஞ்சிபுரம் நகர செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவர் எம்.சிவகுரு,கோயில் செயல் அலுவலர் எஸ்.நடராஜன், கோயில் திருப்பணிக்குழுவின் தலைவர் எஸ்.பெருமாள்,செயலாளர் சுப்பராயன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.