காஞ்சிபுரம், ஏப்.22-
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி திருஅவதார உற்சவத்தையொட்டி பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் ஆலயத்துக்கு அருகில் வடக்குமாவட வீதியில் அமைந்துள்ள மண்டபத்துக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும், தீபாராதனைகளும் திங்கள்கிழமை நடைபெற்றது.
சித்திரை மாத ஹஸ்த நட்சத்திரத்தில் காஞ்சிபுரம் வரதராஜசுவாமி அவதரித்த தினமாகும்.இதனையொட்டி அத்திகிரி மலையில் வரதராஜசுவாமி கோயிலில் மூலவர் கருவறையில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
இதன் பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் தேவராஜசுவாமி மற்றும் கண்ணன், செல்வர், மணவாளன், பிராணதார்த்தி ஹரவரதர் உட்பட பஞ்சபேரர்களும் ஆபரணங்கள் அணிந்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் புண்ணியகோடி விமானத்தில் புறப்பாடாகி ஆலயத்தின் அருகே வடக்கு மாட வீதியில் உள்ள மண்டபத்துக்கு எழுந்தருளினார்.
மண்டபத்தில் உற்சவர் தேவராஜசுவாமிக்கு ஆலயத்தின் தலைமை பட்டாச்சாரியார் கிட்டு தலைமையில் சிறப்புத் திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக உற்சவர் தேவராஜசுவாமி ஆலயத்தின் மாட வீதிகளில் புறப்பாடாகி கோயிலுக்கு வந்து சேர்ந்தார்.ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் எஸ்.சீனிவாசன் தலைமையில் கோயில் மணியக்காரர் கிருஷ்ணன் மற்றும் பட்டாச்சாரியார்கள், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
நாளை பூமிக்கடியில் திருவிழா
காஞ்சிபுரம் வரதராஜசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று நடைபெறும் நடவாவிக்கிணறு என்னும் கிணற்றுக்குள் (பூமிக்கடியில்) வரதாரஜர் இறங்கும் திருவிழா நடைபெறுகிறது. இவ்விழாவையொட்டி பெருமாள் திங்கள்கிழமை இரவு அமுதப்படி தெரு வழியாக செவிலிமேடு மண்டகப்படிக்கு எழுந்தருள்கிறார்.
பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தூசி கிராம மண்டகப்படிகளில் சேவை சாதித்து சின்ன ஐயங்கார் குளத்தில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு எழுந்தருளி சிறப்புத் திருமஞ்சனமும்,தீபாராதனைகளும் நடைபெறுகிறது.
இதன் தொடர்ச்சியாக சின்னஐயங்கார் குளத்திலிருந்து புறப்பாடாகி அருகில் உள்ள நடவாவிக்கிணறுக்கு எழுந்தருள்கிறார். பெருமாள் வருகையையொட்டி கிணற்றுநீர் முழுவதும் மோட்டார் மூலமாக வெளியில் எடுத்து சுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இக்கிணற்றிற்குள் 48 படிகள் வழியாக உள்ளே இறங்கி சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகிறது. பின்னர் கிணற்றிலிருந்து வெளியில் வந்து பாலாற்றில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிக்கு எழுந்தருளி சேவை சாதித்து மீண்டும் ஆலயத்துக்கு வந்து சேருகிறார்.