Type Here to Get Search Results !

ராம நவமி: அயோத்தி ராமர் நெற்றியில் திலகம் வடிவில் விழுந்த சூரிய கதிர்கள்! - புகைப்படம் தொகுப்பு

 அயோத்தி: 

அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் உள்ள குழந்தை ராமரின் நெற்றியில் சூரிய கதிர்கள் திலகம் வடிவில் விழவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 22-ம் தேதி பிரதமர் மோடி ராமர் கோயிலைத் திறந்து வைத்த பின்னர் வரும் முதல் ராம நவமி இது என்பது குறிப்பிடத்தக்கது.



ராம நவமி நாளான இன்று (புதன்கிழமை) பகல் 12.01 மணிக்கு அயோத்தி கோயிலில் உள்ள ராமரின் முன்நெற்றியில் திலகம் போல சூரியக் கதிர்கள் விழுந்தன. 


சுமார் இரண்டு, இரண்டரை நிமிடங்கள் நிகழ்வு நீடித்தது. சூரிய திலகத்தின் நீளம் சுமார் 58 மி.மீ வரை இருந்தது. இந்த நிகழ்வு அயோத்தியின் 100 இடங்களில் பெரிய எல்இடி திரையில் திரையிடப்பட்டன. கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களின் உதவியுடன் இந்த சூரிய திலகம் விழுவது சாத்தியப்படுத்தப்பட்டது.




ஷிகாராவின் அருகில் உள்ள மூன்றாவது மாடியில் இருந்து ராமர் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிர்கள் பிரதிபலிக்கப்பட்டன. கருவறைக்குள் சூரிய ஒளி செல்வதற்கு வழி இல்லாததால் இந்த வழிமுறை கடைபிடிக்கப்பட்டது.


இந்திய வான் இயற்பியல் நிறுவனத்துடன் கலந்தாலோசித்து ரூர்கியில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானிகள் இந்தப் பொறியியல் முறையை உருவாக்கி உள்ளனர். ஒவ்வொரு வருடமும் ராம நவமி அன்று சூரிய கதிர்கள் ராமரின் நெற்றியில் விழும்படியாக அப்டோமெக்கானிகல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. என்றாலும் சூரியனின் கோணங்களுக்கு ஏற்ப கண்ணாடி மற்றும் லென்ஸில் சிறிய மாற்றம் செய்ய வேண்டியது அவசியம்.




இதுகுறித்து ராமர் கோயில் தலைமை அர்ச்சகர் கூறும்போது, 

“இந்த புனிதமான நாளில் ராமருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடத்தப்பட்டது. ராமர் மஞ்சளாடை அணிந்திருந்தார். ராமருக்கு 56 வகையான பிரசாதங்கள் படைக்கப்பட்டன” என்றார்.




இதனிடையே, இந்தச் சூரிய திலகம் நிகழ்ந்த போது, அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த பிரதமர் மோடி, ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டார். 


அவர் கூறுகையில், “நாடு முழுவதும் ஒரு புதிய சூழல் உருவாகியுள்ளது. 500 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் ராமரின் இந்தப் பிறந்த நாளில், ராமர் தனது பிறந்த நாளை அவரது சொந்த வீட்டில் கொண்டாடும் பாக்கியம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


அயோத்தி ராமர் கோயிலில் நடந்த சூரிய திலகம் நிகழ்ச்சியைத் தனது லேப் டாப்பில் பிரதமர் மோடி பார்த்தார். 


இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவில், 


“எனது நல்பரி பேரணிக்கு பின்னர் ராமர் கோயிலில் நிகழ்ந்த சூரிய திலகத்தை நான் பார்த்தேன். நாட்டிலுள்ள கோடிக்கணக்கான மக்களைப் போல எனக்கும் இது உணர்ச்சிபூர்வமான தருணம். அயோத்தியில் நடந்த இந்த பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. இந்த சூரிய திலகம் நமது வாழ்வில் ஆற்றலையும், நமது சேதம் பெருமையின் புதிய உச்சங்களை அடைய ஊக்கம் தரட்டும்” என்று தெரிவித்துள்ளார்.


முன்னதாக, இந்த நிகழ்வில் பங்கேற் கும்படி உலகெங்கிலும் உள்ள ராம பக்தர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவொன்றில், “500 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர், இந்த முறையில் இந்த ராம நவமியை கொண்டாடும் பாக்கியம் நமக்கு கிடைத்துள்ளது. இது நாட்டு மக்களின் பல ஆண்டுகால தவம் மற்றும் தியாகத்தின் பலன்” என்று தெரிவித்திருந்தார்.



















Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.