காஞ்சிபுரம், ஏப்.4:
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வியாழக்கிழமை காமாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளி மூலவர் காமாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளையும் நடத்தினார்.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70 வது பீடாதிபதியாக இருந்து வருபவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.இவர் வடமாநில விஜயயாத்திரை நிறைவு பெற்று இரு ஆண்டுகளுக்குப் பிறகு காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு அண்மையில் திரும்பினார். இதனைத் தொடர்ந்து காஞ்சி காமகோடி பீடத்துக்கு சொந்தமானதும்,மகாசக்தி பீடங்களில் ஒன்றானதாகவும் இருந்து வரும் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு எழுந்தருளினார்.
கோயில் ஸ்தானீகர்கள் மங்கல மேள வாத்தியங்களுடனும்,பூரண கும்ப மரியாதையுடனும் வரவேற்றனர்.பின்னர் அயோத்தி மன்னர் தசரதர் காமாட்சி அம்மனை வேண்டி புத்திர காமேஷ்டியாகம் செய்து ராமர் பிறந்தது தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் அடங்கிய சிற்பங்கள் கோயில் வசந்த மண்டபத்தில் இருந்ததைப் பார்வையிட்டதுடன் அருகிலிருந்தவர் களுக்கும் அதன் முக்கியத்துவத்தை விளக்கிக் கூறினார்.
காமாட்சி அம்மன் கோயிலில் மூலவர் காமாட்சிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளையும் நடத்தினார்.மூலவர் காமாட்சி அம்மனும்,ஆலய வளாகத்தில் உள்ள ஆதிசங்கரரும் தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆதிசங்கரர் சந்நிதி முன்பாக ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்தும் விஜயேந்திரரை வரவேற்றனர்.விஜயேந்திரர் வருகையையொட்டி காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி.ஜீவானந்தம் தலைமையில் அன்னதானமும் நடைபெற்றது.
ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்களுக்கும்,கோயில் ஸ்தானீகர்கள்,பணியாளர்கள் உட்பட அனைவருக்கும் அருளாசி வழங்கினார்.ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயர்,மணியக்காரர் சூரியநாராயணன் ஆகியோர் தலைமையில் ஸ்தானீகர்கள் செய்திருந்தனர்.