காஞ்சிபுரம்,ஏப்.8:
காஞ்சிபுரம் கச்சபேசுவரர் ஆலய வளாகத்தில் அரச மரத்தடியில் உள்ள நாகதேவதைகளுக்கு திங்கள்கிழமை சோமவார அமாவாசையையொட்டி திரளான பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகளை நடத்தினார்கள்.
காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரர் ஆலய வளாகத்தில் உள்ள அரச மரத்தடியில் ஏராளமான நாகர் சிலைகள் உள்ளன.
நாக தேவதை எனப்படும் இச்சிலைகளுக்கு திங்கள்கிழமை வரும் அமாவாசை நாட்களின் போது பெண்கள் திருமணத்தடை நீங்கவும், குழந்தை வரம் வேண்டியும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்து வழிபடுவது பல ஆண்டுகளாக வழக்கமாக இருந்து வருகிறது.
சோமவார அமாவாசையையொட்டி நாக தேவதைகளுக்கு பெண்கள் பலரும் மஞ்சள்,பால்,அரிசி மாவு ஆகியனவற்றால் அபிஷேகம் செய்தும்,தீபாராதனைகள் காண்பித்தும் வழிபட்டனர். சில பெண்கள் சுமங்கலிகளுக்கு மஞ்சள்,குங்குமப் பிரசாதமும் வழங்கினார்கள்.