காஞ்சிபுரம், ஜூலை 26:
பெரியகாஞ்சிபுரம் சாலைத்தெருவில் அமைந்துள்ள குளக்கரை மாரியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அம்மன் புட்லூர் அங்காளம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பெரியகாஞ்சிபுரம் சாலைத்தெருவில் அமைந்துள்ளது பழமையான குளக்கரை மாரியம்மன் திருக்கோயில்.இக்கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி முதல் நாள் நிகழ்ச்சியாக உற்சவர் கர்ப்பிணிப் பெண் போல புட்லூர் அங்காளம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் அம்மனை தரிசித்தனர். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன.மாலையில் ஆலயத்தின் முன்பாக திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றது.
விழாவின் 2 வது நாள் நிகழ்வாக சனிக்கிழமை ராதாம்மாள் வரதப்பிள்ளை அறக்கட்டளை சார்பில் அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் ஊக்கத்தொகையினை வழங்குகிறார்.3 வது நாளாக ஞாயிற்றுக்கிழமை கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், பொங்கல் வைக்கும் வைபவமும் அதனையடுத்து அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.