காஞ்சிபுரம்:
காஞ்சீபுரத்தில் உள்ள உலகளந்த பெருமாள் கோவில் சிறப்பு பெற்றது. இந்த கோவில் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீ ஊரகத்தான் சன்னதி, ஸ்ரீ காரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ நீரகத்து பெருமாள் சன்னதி, ஸ்ரீ கார்வானப் பெருமாள் சன்னதி என 4 திவ்ய தேச சன்னதிகள் அமைந்துள்ள ஒரே கோவிலாகவும், திருமழிசையாழ்வாரால் பாடப்பட்ட திருத்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.
கடந்த 2007-ம் ஆண்டு கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்று இருந்தது. இந்தநிலையில் கோவிலில் மீண்டும் கும்பாபிஷேக விழா நடத்த முடிவு செய்யப் பட்டது. இதைத் தொடர்ந்து உலகளந்த பெருமாள் சன்னதி, ஆரணவல்லித் தாயார் சன்னதி, ராஜகோபுரம் மற்றும் விமானங்கள் புதுப்பிக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.
இந்தநிலையில் கோவில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 6 யாக குண்டங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜமாணிக்கம், அறங்கா வலர்கள் அப்பன் அழகிய சிங்கர், கோமடம் ரவி, பேரகத்தி பட்டர் ரகுராம் உள்ளிட்டோர் செய்து வருகிறார்கள்.
தலவரலாறு
பெருமாள் 35 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்டு நெடிது உயர்ந்து தனது இடதுகாலை விண்ணோக்கி தூக்கியும், இடது கரத்தில் இரண்டு விரல்களை உயர்த்தியும், வலது கரத்தில் ஒரு விரலை உயர்த்தியும், மேற்கு நோக்கி திரிவிக்கிரம வடிவத்தில் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலின் பிரகாரத்திலேயே நீரகம், காரகம், கார்வானம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இப்படி ஒரே இடத்தில் 4 திவ்ய தேச பெருமாளைக் காணலாம். இது மிகவும் சிறப்பான ஒன்றாகும். வேறு எங்கும் இதைப்போல் ஒரே கோயிலில் 4 திவ்ய தேசங்களைக் காண முடியாது. இது காஞ்சிக்குக் கிடைத்த பெரும்பேறு ஆகும்.
பெருமாள் சந்நிதி அருகே பகவான் ஆதிசேஷனாக திருக்கோலம் கொண்டு சேவை சாதிக்கிறார்.
மகாபலி அசுரேந்திரனாக முடி சூட்டிக் கொண்டதும் அவனுடைய ஆணை 3 உலகங்களிலும் செயல்பாட்டுக்கு வந்தது. இதனால் தேவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். தேவர்களின் கஷ்டங்களைப் போக்கவும், மகாபலியின் கொட்டத்தை அடக்கவும், திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் சென்று நிம்மதியாக பகவானைத் தியானிக்க தனக்கென்று ஓர் இடம் தேவைப்படுகிறது. அதை அளித்தால் நன்மையாக இருக்கும் என்று கேட்டார்.
மகாபலியும் இதற்கு உடன்பட்டு தேவையான அளவு இடத்தை எடுத்துக் கொள்ளக் கூறினார். உடனே திருமால் திரிவிக்கிரம வடிவம் எடுத்து தன்னுடைய ஒரு திருவடியால் மேலுலகத்தையும் மற்றொரு திருவடியால் கீழுலகத்தையும் அளந்தார்.
மூன்றாவது அடிக்கு இடமில்லை என மகாபலியிடம் வாமனர் கூற, அதற்கு மகாபலி அடியேனின் சிரசு இருக்கிறது என்று கூறி தனது தலையைக் கொடுத்தான். திரிவிக்கிரமர் தன் பாதத்தை மகாபலியின் தலையில் வைத்து அழுத்தி அவனை பாதாள லோகத்தில் கொண்டு சேர்த்தார். மீண்டும் மூன்று லோகத்தையும் இந்திரனிடம் இருக்குமாறு செய்தார்.
அப்போதுமகாபலி, பகவான் திருக்கோலத்தை முழுமையாகக் காண இயலவில்லை என்றெண்ணி பாதாள உலகத்தில் பெருமாளை நோக்கித் தவம் செய்தான். தவத்துக்கு மகிழ்ந்த பெருமாள், இந்தத் தலத்திலேயே மகாபலிக்கு, உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாகத் தந்தார்.
மகாபலியோ நிரந்தரமாக, தான் அந்த உருவை தரிசித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று பேராவல் கொண்டதால் பாதாள உலகத்து ஜீவன்களில் ஒன்றான ஐந்து தலை நாகமாக காட்சி தந்தார் திருமால்.
அதாவது அந்த நாகத்தைப் பார்த்தால் அவனுக்கு ஆதிசேஷன் நினைவுக்கு வரவேண்டும். ஆதிசேஷன் நினைவுக்கு வந்தால் அதில் பள்ளி கொண்ட பரந்தாமன் நினைவுக்கு வருவார். கூடவே இந்த உலகளந்த மாபெரும் தோற்றமும் நினைவுக்கு வரும் என்று திருமால் நினைத்தார் போலிருக்கிறது.
இந்த நாகத் தோற்றத்தைத் தான் இந்த கோயில் வளாகத்தில் திவ்ய தேசப் பெருமாளாக தரிசிக்கிறோம்.
நாகம் என்றாலே பால் நிவேதனம் என்ற பாரம்பரிய ஆராதனை சம்பிரதாயமும் உடன் வருகிறது. ஆதிசேஷன் பாற்கடலில் திருமாலுக்குப் படுக்கையாக இருப்பதும் இதே தொடர்பை ஒட்டித்தான் உள்ளது.
அதனால்தான் ஆதிசேஷன் முதல் சிறு நாகம் வரை பாம்புக்கு பால் வார்க்கும் மரபு இன்றளவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வகையில் இந்த திரு ஊரகத்தானுக்கும் பால் பாயசம் நிவேதனம் செய்யப்படுகிறது. தெற்கு நோக்கி காட்சிதரும் திரு ஊரகத்தானுக்கு பால் பாயசம் நிவேதித்தால் திருமணத் தடை நீங்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், ராகு கேது தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை. முக்கியமாக வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில் திரு ஊரகத்தானுக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது.
இத்தலப் பெருமாளை வணங்கினால், அனைத்து பாவங்களும் மன்னிக்கப் பெற்று, அவர் அனுக்கிரகம் கிடைக்கும்.