காஞ்சிபுரம், ஆக.2:
ஆடிப் பதினெட்டாம் பெருக்கையொட்டி வெள்ளிக்கிழமை பாலாற்றிலிருந்து எடுத்து வரப்பட்ட புனிதநீரால் சந்திர மௌலீசுவர சுவாமிக்கு காஞ்சி சங்கராசாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜைகள் செய்தார்.
தமிழ் மாதமான ஆடி மாதம் 18 ஆம் நாள் ஆடிப்பெருக்கு தினமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காஞ்சிபுரம் அருகே ஓரிக்கை பகுதியில் பாலாற்றங்கரையிலிருந்து வேத விற்பன்னர்களால் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் பல்லக்கில் எடுத்து வரப்பட்டது.
அப்புனித நீருக்கு காஞ்சி சங்கராசாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பல்வேறு புஷ்பங்களால் அர்ச்சித்து வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து அப்புனித நீரால் ஓரிக்கை மணி மண்டபத்தில் உள்ள பூஜா மண்டபத்தில் சந்திரமௌலீசுவர சுவாமிக்கு சுவாமிகள் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடத்தினார்.
இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்ததுடன் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடமும் ஆசியும் பெற்றனர்.
ஏற்பாடுகளை காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,செயலாளர் செல்லா.விஸ்வநாத சாஸ்திரி, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் ஆகியோர் செய்திருந்தனர்.