காஞ்சிபுரம், ஆக.11:
காஞ்சிபுரம் ஸ்ரீ ஆகாய கன்னியம்மன் கோயிலில் ஆடித்திருவிழாவையொட்டி தீமிதித்திருவிழாவும், சுவாமி வீதியுலாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.காஞ்சிபுரம் மாநகராட்சி சின்னக்காஞ்சிபுரம் ஹதர் பட்டரை தெருவில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி மற்றும் கன்னியம்மன் திருக்கோயில்.
இக்கோயிலில் உள்ள ஆகாய கன்னியம்மனுக்கு ஆடித்திருவிழாவும், 50 ஆம் ஆண்டு தீமிதித் திருவிழாவும் நடைபெற்றது.விழாவையொட்டி காலையில் அம்மனுக்கு சிறப்புஅபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து மூலவர்ஆகாய கன்னியம்மன் மகிசாசூர மர்த்தினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் ஆகாய கன்னியம்மன் புஷ்ப அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் ஹதர் பேட்டை தெரு பொதுமக்கள் மற்றும் இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.