காஞ்சிபுரம்,செப்.6:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் தோப்பு பகுதியில் அமைந்துள்ள ஞானகணபதி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் சிஎஸ்எம் தோப்பு பகுதியில் அமைந்துள்ளது பழமையான ஞானகணபதி கோயில். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் வசித்த பக்தர் ஒருவரது கனவில் விநாயகப் பெருமான் எழுந்தருளி தனக்கு இப்பகுதியில் கோயில் கட்டுமாறு சொல்லி அருளினார்.
அதன்படி 10 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோயில் கட்டப்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் முதலாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதனையடுத்து ரூ.15லட்சம் செலவில் திருப்பணிகள் நிறைவு பெற்று 2 வது கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 4 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கின. 3 நாட்களாக நடைபெற்று வந்த யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் ராஜகோபுரத்துக்கு புனிதநீர்க் குடங்களை எடுத்து சென்று மகா கும்பாபிஷேகம் செய்தனர்.
கும்பாபிஷேக நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் மற்றும் தருமபுர ஆதீனத்தின் ஸ்ரீ காரியம் ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ததுடன் பக்தர்களுக்கும் அருளாசி வழங்கினார்கள்.விழாவில் வல்லக்கோட்டை முருகன் கோயில் நிர்வாக அலுவலர் சோ.செந்தில் குமார் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் சுடர்மணி,செல்வராஜ்,பத்மனாபன் ஆகியோர் செய்திருந்தனர்.