காஞ்சிபுரம், செப்.6:
காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள இஷ்டசித்தி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் இரட்டை மண்டபம் அருகில் அமைந்துள்ளது பழமையான இஷ்டசித்தி விநாயகர் கோயில்.இக்கோயில் வளாகத்திலேயே அருளாளர் ராமலிங்க சுவாமிகளுக்கும் தனியாக சந்நிதி உள்ளது.
இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி புதுப்பிக்கப்பட்டு நிகழ் மாதம் 4 ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.கடந்த 3 நாட்களாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மூலவர் இஷ்டசித்தி விநாயகருக்கும்,அருளாளர் ராமலிங்க சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.அபிஷேகத்தினை ஆலய அர்ச்சகர் கே.கபாலி கணேச குருக்கள் செய்தார்.
மூலவர் இஷ்டசித்தி விநாயகர் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் கதிரவன், அருளாளர் ராமலிங்கசுவாமிகள் வழிபாட்டு மன்ற செயலாளர்கள் என்.நரேந்திரன், எஸ்.ரவிக்குமார்,பொருளாளர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.