திருமலை, செப்.17-
திருப்பதி ஏழுமலையான கோயிலில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தையொட்டி தெப்பக்குளத்தில் இன்று தீர்த்தவாரி நடந்தது. சுக்லபட்ச சதுர்தசியில் வரும் விரதங்களில் மிக முக்கிய சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவது அனந்தபத்மநாப சுவாமி சதுர்தசி விரதம்.
புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்தசி திதியில் வரும் இது, அளவிட முடியாத செல்வ செழிப்புக்களை அளிக்கக்கூடியதாகும். நாராயணன் ஆதிசேஷன் மீது, அனந்த பத்மநாபனாக சயனித்தவாறு இந்நாளில் தோன்றியதாக கூறப்படுகிறது. எனவே மகாவிஷ்ணு கலியுகத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சீனிவாச பெருமாள் அவதாரமாக பக்தர்கள் கேட்கும் கோரிக்கைகளை நிறை வேற்றும் தெய்வமாக உள்ளார்.
இதையொட்டி திருமலையில் அனந்த பத்மநாப சாமி விரதத்தை யொட்டி சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி இன்று நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் புனித நீராடினர்.
அனந்த பத்மநாப சுவாமி விரதம் 108 வைணவ திவ்ய தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் கடைசி நாள், வைகுண்ட ஏகாதசி, ரதசப்தமி, அனந்த பத்மநாப சுவாமி விரத தினங்களில் மட்டுமே சக்கரத்தாழ்வாருக்கு தெப்பகுளத்தில் தீர்த்தவாரி நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி அம்மன் கோயிலில் உள்ள முக்கிய மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு வண்ண பட்டு நூல்கள் அணிவிக்கப்பட்டன. |