காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் சமேத பாடலீசுவரர் கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே தேனம்பாக்கத்தில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத பாடலீசுவரர் திருக்கோயில்.இக்கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி ஆலயம் புதுப்பிக்கப்பட்டிருந்தது.
கும்பாபிஷேகத்திற்கான யாகசாலைகள் நிகழ் மாதம் 14 ஆம் தேதி தொடங்கப்பட்டது. கணபதி ஹோமம், கோ பூஜை, தனபூஜை, நவக்கிரக ஹோமம் ஆகியன கடந்த இரு தினங்களாக நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து 4 வது கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பிறகு சிவாச்சாரியார்கள் புனிதநீர்க்குடங்களை கோபுரத்திற்கு மங்கல மேள வாத்தியங்களுடன் எடுத்து சென்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மூலவருக்கும், ஆலயத்தின் பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச பராமாச்சாரிய சுவாமிகள்,காஞ்சிபுரம் துணை மேயர் ஆர்.குமரகுருநாதன்,தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் சன்பிராண்ட். ஆறுமுகம், உட்பட திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பாஜக ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டுப்பிரிவின் துணைத் தலைவர் லியோ.என்.சுந்தரம், எம்எல். மாணிக்கவேலு, எம்.கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.