![]() |
வரதராஜப் பெருமாள் கோயிலில் சிருங்கேரி சங்கராசாரியார் தரிசனம் |
காஞ்சிபுரம், அக்.28:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி விதுசேகர பாரதி சுவாமிகள் திங்கள்கிழமை தரிசனம் செய்தார்.
சிருங்கேரி சாரதா மடத்தின் பீடாதிபதி விதுசேகர பாரதி சுவாமிகள் காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள சிருங்கேரி மடத்தின் கிளைக்கு சனிக்கிழமை எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில், உலகளந்த பெருமாள் கோயில்,ஆதி பீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயில் ஆகியன உட்பட பல கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
3 வது நாளாக அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி சுவாமி தரிசனம் செய்தார்.
ஆலயத்தின் சிறப்புகளை கோயில் பட்டாச்சாரியார்கள் விளக்கி கூறினார்கள்.ஆலய அறங்காவலர் எஸ்.சீனிவாசன் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடனும்,மங்கல மேள வாத்தியங்களுடனும் வரவேற்பளித்தனர்.
ஆலய வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்தில் கோயில் பட்டாச்சாரியார்கள்,நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.பின்னர் சிருங்கேரி மடத்தின் கிளைக்கு எழுந்தருளி சாரதா சந்திர மௌலீசுவரர் பூஜை நடத்தியதுடன் பக்தர்களுக்கு அருளாசியும் வழங்கினார்.ஜெகத்குரு சந்திர சேகர பாரதி மகா சுவாமிகளின் ஜெயந்தி பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.
திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிருங்கேரி சங்கராசாரியாரை தரிசித்து அருளாசி பெற்றனர். ஏற்பாடுகளை விஜய யாத்திரைக் குழுவின் தலைவர் ஜெ.எஸ்.பத்மனாபன், காஞ்சிபுரம் கிளை மேலாளர் என்.சுப்பிர மணியன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர். மாலையில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.