காஞ்சிபுரம், அக். 29-
காஞ்சிபுரம் அடுத்த கிளார் கிராமத்தில், அகத்திய முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட அறம்வளர் நாயகி சமேத அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2018 ல் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஸம்வத்ஸாரபிஷேகம் என அழைக்கப்படும் வருடாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆறாம் ஆண்டு வருடாபிஷேக பெருவிழா நேற்று கோபூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து சங்காபிேஷகமும், விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, யாகசாலை பூஜை, யாக வேள்வியும், மஹா பூர்ணாஹூதி, கடம் புறப்பாடு, வருடாபிஷேகம் , மஹாதீபாராதனையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.
அகத்தீஸ்வரருக்கும், அறம்வளர்நாயகிக்கும் திருக்கல்யாண மஹோற்சம் விமரிசையாக நடந்தது.
தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் திருப்பணி குழுவினர், கிளார் கிராம பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.