காஞ்சிபுரம், அக்.13:
தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில் வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவு நாளையொட்டி சனிக்கிழமை தேசிகன் சுவாமிகள் அஞ்சலித் திருக்கோலத்தில் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது தூப்புல் வேதாந்த தேசிகன் கோயில். இக்கோயில் வருடாந்திர பிரமோற்சவம் இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற்றது.
விழாவையொட்டி தினசரி காலையில் தேசிகன் சுவாமிகள் தங்கப்பல்லக்கிலும், மாலையில் வெவ்வேறு வாகனங்களிலும் அலங்காரமாகி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இம்மாதம் 9 ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேசிகன் சுவாமிகள் அஞ்சலித் திருக்கோலத்தில் தங்கப்பல்லக்கில் காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோயிலுக்கு எழுந்தருளி மங்களாசாசனமும், தேசிகருக்கு மாலை மரியாதை செய்யும் வைபவமும் நடைபெற்றது.
மாலையில் தேசிகன் சுவாமிகள் பூப்பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.வருடாந்திர பிரமோற்சவத்தின் நிறைவாக ஞாயிற்றுக்கிழமை கந்தப்பொடி வசந்தம் உற்வத்துடன் விழா நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர்கள் ஜெ.ப.பூவழகி,ப.முத்துலட்சுமி,விளக்கொளி தூப்புல் வேதாந்த தேசிகன் ச்ரவணம் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.