காஞ்சிபுரம், அக்.15:
சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயிலில் பவித்ரோற்சவம் நிறைவு பெற்றதையொட்டி சிறப்பு யாகசாலை பூஜையும்,உற்சவர் சொன்னவண்ணம் செய்த பெருமாளுக்கு சிறப்பு தீபாராதனைகளும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
சின்னக்காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில். ஆலய விழாக்களின் போது அறியாமல் நடந்த சிறு,சிறு பிழைகளை இறைவன் தவிர்க்க வலியுறுத்தி பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது.
இக்கோயிலில் இம்மாதம் 12 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு பவித்ரோற்சவம் நடைபெற்றது. பவித்ரோற்சவம் நடைபெற்ற 4 நாட்களும் யாகசாலை பூஜைகளும்,பெருமாளுக்கு அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
15 ஆம் தேதி பவித்ரோற்சவம் நிறைவையொட்டி ஆலயத்தில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்றது.பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் சொன்னவண்ணம் செய்த பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் நல்லப்பா. நாராயணன் தலைமையிலான விழாக் குழுவினர் செய்திருந்தனர்.