காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் ஐப்பசி மாத ஏகாதசியையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமி ஆலய வளாகத்திற்குள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அத்திவரதர் புகழுக்கும்,108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகவும் இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித் தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில்.
இக்கோயிலில் ஐப்பசி மாத ஏகாதசியையொட்டி உற்சவர் வரதராஜசுவாமி காலையில் அத்திமலையிலிருந்து அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளியதும் சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது.
மாலையில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைர,வைடூரிய தங்க ஆபரணங்கள் அணிந்தவாறு சிறப்பு அலங்காரத்தில் ஆலய வளாகத்திற்குள் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்களும் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.