
காஞ்சிபுரம், நவ.12:
காஞ்சிபுரம் மேற்குராஜவீதியில் அமைந்துள்ள சுக்ல யஜூர் வேத சாஸ்திர பாடசாலை அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ யோகீஸ்வர சுவாமிகளின் ஜெயந்தி மகோற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை யானை வாகனத்தில் அலங்காரமாகி ராஜவீதிகளில் பவனி வந்தார்.
பெரியகாஞ்சிபுரம் மேற்குராஜவீதியில் அமைந்துள்ளது சுக்ல யஜீர் வேத சாஸ்திர பாடசாலை. இந்த பாடசாலை சார்பில் ஸ்ரீ யோகீஸ்வர மகரிஷியின் 115 வது ஜெயந்தி மகோற்சவம் இம்மாதம் 7 ஆம் தேதி சுவாமிக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரத்துடன் தொடங்கியது.7 ஆம் தேதி தொடங்கிய மகோற்சவம் நவ.12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவு பெற்றது.
விழா நாட்களில் ஸம்ஹிதா ஹோமம், நவாவர்ண பூஜை,மங்கள சண்டி மகா ஹோமம்,கன்யா பூஜை மற்றும் கலசாபிஷேகம் ஆகியனவும் நடைபெற்றது.தினசரி பல்வேறு கலைநிகழ்ச்சிகள்,ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றன.
நிறைவு நாளையொட்டி செவ்வாய்க்கிழமை யோகீஸ்வர மகரிஷி யானை வாகனத்தில் அலங்காரமாகி நகரில் ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிறைவு நாள் விழாவில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் உட்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை சுக்ல யஜூர் வேத சாஸ்திர பாடசாலை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.