காஞ்சிபுரம், நவ.19:
காஞ்சிபுரம் ஸ்ரீ பம்பை பாலகன் பக்த ஜன சபை சார்பில் பெரியகாஞ்சிபுரம் யதுகுல வேணுகோபால பஜனை மந்திர சபையில் 108 திருவிளக்குப் பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெரியகாஞ்சிபுரம் ஸ்ரீ பம்பை பாலகன் பக்த ஜன சபை சார்பில் 38-வது ஆண்டு திருவிளக்குப் பூஜை பாண்டவ பெருமாள் கோயில் வடக்கு மாட வீதியில் உள்ள யதுகுல வேணுகோபால பஜனை மந்திர சபையில் நடைபெற்றது.
திருவிளக்குப் பூஜையையொட்டி காலையில் கணபதி ஹோமமும், அதனையடுத்து ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மலர் அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
தர்மசாஸ்தா பஜனை குழுவின் பக்தர்கள் ஐயப்பன் பக்திப்பாடல்களை பாடினார்கள். பாண்டுரெங்க குருசாமி ஐயப்பசுவாமிக்கு ஜோதி தரிசனம் காண்பித்து அனைத்து ஐயப்ப பக்தர்களையும் ஆசீர்வதித்தார். மாலையில் 108 பெண்கள் பங்கேற்ற திருவிளக்குப் பூஜையும் நடைபெற்றது.