காஞ்சிபுரம், நவ.17:
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை இந்திரா நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள செந்தூர் பாலமுருகன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத் செல்லும் சாலையில் முத்தியால்பேட்டை இந்திரா நகரின் பிரதான பிரதான சாலையில் அமைந்துள்ளது செந்தூர் பாலமுருகன் கோயில்.இக்கோயில் மகா கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
நவக்கிரக ஹோமம்,தனபூஜை ஆகியனவும் நடைபெற்றன.2வது நாளாக ஞாயிற்றுக்கிழமை வருணபூஜை,சாந்தி ஹோமம்,புதிய விக்ரகங்களுக்கு கண் திறத்தல் ஆகியன நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மகா பூரணாகுதி தீபாராதனைக்குப் பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர்க்குடங்கள் கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாஷேகத்திற்கு பின்னர் மூலவர் செந்தூர் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.
விழாவில் உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்,வாலாஜாபாத் ஒன்றியத்தின் தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், துணைத் தலைவர் பி.சேகர், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், முத்தியால்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் முன்னா என்ற முனீர்கான் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் பலரும் கலந்து கொண்டனர். ஆலய நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.