காஞ்சிபுரம், ஜூலை 29:
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் திருவாடிப்பூரம் உற்சவத்தையொட்டி செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜப் பெருமாளும், ஆண்டாளும் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வைணவத் திருக்கோயில்களில் 108 இல் ஒன்றாகவும்,அத்திவரதர் புகழுக்கும் உரியது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் திருவாடிப்பூரம் உற்சவம் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
உற்சவத்தையொட்டி தினசரி ஆண்டாள் சிறப்பு அலங்காரத்தில் சந்நிதி வீதியில் எழுந்தருளி உலா வந்து திருமுற்றவெளி பகுதியில் உள்ள 4 கால் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவாடிப்பூர உற்சவத்தையொட்டி திங்கள்கிழமை ஆண்டாளுக்கும், வரதராஜசுவாமிக்கும் திருக்கல்யாணம் ஆகம விதிகளின் படி நடைபெற்றது.இ
தன் தொடர்ச்சியாக செவ்வாய்க்கிழமை ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமியும், ஆண்டாளும் சிறப்பு அலங்காரத்தில் மங்கல மேள வாத்தியங்கள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் மாடவீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் வழிபட்டனர்.ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பணியாளர்கள் மற்றும் கோயில் பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.