![]() |
Garuda Panchami Visesha Alankara - Lord Vishnu |
ஆடி மாதத்தில் அம்பிகையின் அருளுடன் நாக தேவதைகளின் அருளையும் பெறுவதற்கான முக்கியமான வழிபாட்டு நாள் தான் நாக பஞ்சமி மற்றும் கருட பஞ்சமி நாள்.
ஆடி மாத வளர்பிறையில் வரும் சதுர்த்தியை நாக சதுர்த்தி என்றும், அதற்கு அடுத்த நாளான பஞ்சமி திதியை நாக பஞ்சமி என்றும், கருட பஞ்சமி என்றும் வழிபடுகிறோம். மகாவிஷ்ணுவின் வாகனமாக திகழும் கருடனின் அருளையும், நாகங்களின் அருளையும் ஒரே நாளில் பெறக் கூடிய அற்புதமான நாளாகும். இந்த நாளில் நாகங்களை வழிபடுவதாலும், புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுவதும், கருட வாகனத்தில் பெருமாளை தரிசிப்பதும், கருடனுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவதும் சிறப்பானதாகும்.
நாக பஞ்சமி அன்று வீட்டில் செய்யும் சில எளிய பூஜைகள் எப்போதும் நமக்கு கவசம் போல் இருந்து பாதுகாக்கும். அதே போல் இந்த நாளில் நாம் இருக்கும் விரதத்தின் பலன் நம்முடைய தாய், உடன் பிறந்தவர்கள் ஆகியோரையும் காக்கும். ஆபத்துக்களை விலக செய்யும். குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.
நாக பஞ்சமி, கருட பஞ்சமி சிறப்புகள் :
நாக பஞ்சமி அல்லது கருட பஞ்சமி இந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி செவ்வாய் கிழமை வருகிறது. ஆடி செவ்வாய் கிழமையில் வருவதால் இந்த நாளில் அம்பிகையை வழிபடுவதுடன் நாகங்களையும் வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரும். இந்த நாளில் கருடாழ்வாரை வழிபடலாம். இது கருடன், நாகங்கள் இருவருக்கும் உரிய நாள் என்பதால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது
நாக, கருட பஞ்சமி வழிபாட்டு பலன்கள் :
ஆடி மாத வளர்பிறை பஞ்சமி நாளை, கருட பஞ்சமி என்றும், நாக பஞ்சமி என்றும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கருடனையும், நாகங்களையும் வழிபட்டால் கண் திருஷ்டி, நோய்கள் ஆகியவை நீங்கும். இந்த நாளில் யார் விரதம் இருந்தாலும் அதன் பலன் அவர்களுக்கு மட்டுமின்றி, அவர்கள் யாருக்காக விரதம் இருக்கிறார்களோ அவர்களுக்கு சென்று சேரும்.
நாக பஞ்சமி 2025 தேதி, நேரம் :
ஜூலை 29ம் தேதி அதிகாலை 01.23 மணிக்கு துவங்கி, ஜூலை 30ம் தேதி அதிகாலை 02.29 மணி வரை பஞ்சமி திதி உள்ளது.
அன்றைய தினம் செவ்வாய் கிழமை என்பதால் காலை 6 மணி முதல் 08.45 மணி வரையிலான நேரத்திலும்,
காலை 10.35 முதல் பகல் 1 மணி வரையிலும் கருட பஞ்சமி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
காலையில் நேரம் இல்லை, மாலையில் தான் பூஜை செய்ய நேரம் இருக்கும் என்பவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு கருட பஞ்சமி மற்றும் நாக பஞ்சமி வழிபாட்டினை மேற்கொள்ளலாம்.
நாக பஞ்சமி, கருட பஞ்சமி வழிபாட்டு முறை :
ரக்சை கயிறு கட்டும் பழக்கம் இருந்தால், ஒரு சிவப்பு நிற கயிறை வாங்கி அதில் பத்து முடிச்சுக்கள் போட்டுக் கொள்ள வேண்டும். இந்த கயிறை அம்மனுக்கு வலது புறம் வைத்து, பாயசம், பால் கொழுக்கட்டை போன்ற பாலால் செய்த ஏதாவது ஒரு இனிப்பை நைவேத்தியமாக படைத்து, அம்பிகைக்குரிய மந்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.
பூஜை முடித்த பிறகு பூஜையில் வைத்து வழிபட்ட கயிற்றை கையில் கட்டிக் கொள்ளலாம். இந்த கயிறை கட்டிக் கொள்வதால் நோய்கள் குணமாகும். கண் திருஷ்டி, தடைகள் நீங்கும், விபத்துக்கள் ஏற்படாது.
கருட பஞ்சமி அன்று, நாகர்களையும் வழிபடலாம். வீட்டில் அம்மனுக்கு பால் வைத்து படைத்து, அந்த பாலை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் புற்றில் ஊற்றலாம். அல்லது அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை சுற்றி இருக்கும் நாகங்களுக்கு ஊற்றலாம். அல்லது மரத்தடியில் ஊற்றலாம். இவை எதற்கும் வாய்ப்பு இல்லாதவர்கள் வீட்டில் இருக்கும் பூச்சடிக்கு அடியில் இருக்கும் மண்ணில் ஊற்றலாம்.
புராணங்களின் படி, பாம்புகளின் உலகம் மண்ணிற்கு அடியில் இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் மண்ணில் விடப்படும் பால், நாகலோகத்தை சென்றடையும். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த வழிபாட்டினை நாக சதுர்த்தி அன்றும் செய்யலாம். முடிந்தவர்கள் நாக பஞ்சமி அன்று முழு நேரமும் உபவாசமாக இருந்து வழிபடலாம்.
ஆடி செவ்வாயில் வரும் நாக பஞ்சமி என்பதால் அன்றைய நாளில் நாகங்களையும், அம்பிகையையும் விரதம் இருந்து வழிபடுவது கூடுதல் விசேஷமானதாகும்.
சொல்ல வேண்டிய மந்திரங்கள் :
ஸ்ரீ கௌரி காயத்ரி மந்திரம்:
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
ருத்ர பத்னியை ச தீமஹி
தந்நோ கௌரி ப்ரசோதயாத்.
ஸ்ரீ ஆதிசேஷன் காயத்ரி:
ஓம் சஹஸ்ர ஷீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்.
கருட காயத்ரி :
தத்புருஷாய வித்மஹே
ஸுவர்ண பக்ஷாய தீமஹி
தந்நோ கருட ப்ரசோதயாத்.
சகல பிரச்சனைகள் நீங்கும்
மந்திரங்கள் கூறி நாக சதுர்த்தி, கருட பஞ்சமியில் விரதம் இருப்பவர்களுக்கு நாக தோஷம், வாழ்வில் மங்கல காரியங்களில் இருக்கும் தடைகள், நாகங்களால் ஏற்பட்ட சாபங்கள், வாழ்க்கையில் இருக்கும் பலவிதமான பிரச்சனைகள் ஆகியவை நீங்கும்.
நாக சதுர்த்தி, கருட பஞ்சமி வரலாறு :
காசியப்ப முனிவருக்கு இரண்டு மனைவிகள். அவர்கள் பெயர் கத்ரு, வினதை. இவர்கள் இருவருக்கும் ஒருவரை கண்டால் மற்றவருக்கு பிடிக்காது. அனைத்திற்கும் இருவருக்கிடையேயும் போட்டி ஏற்பட்டது.
இவர்கள் இருவரும் ஒருமுறை வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் முடிவில் யாருக்கு முதலில் குழந்தை பிறக்கிறதோ அவருக்கு மற்றவர் அடிமையாக இருக்க வேண்டும் என போட்டி வந்தது. இதற்கு ஒப்புக் கொண்ட இருவரும் தன்னுடைய கணவரை வேண்டி வரம் பெற்றனர்.
முதல் மனைவியான கத்ரு - ஆயிரம் முட்டைகள்
முதல் மனைவியான கத்ரு, தனக்கு ஆயிரம் முட்டைகள் வேண்டும். அனைவரும் பார்த்து பயந்து நடுங்கும் வகையிலான நாகங்கள் தனக்கு மகன்களாக பிறக்க வேண்டும் என வரம் கேட்டாள்.
இரண்டாம் மனைவியான வினதை - இரண்டு முட்டைகள்
இரண்டாம் மனைவியான வினதை, தனக்கு இரண்டு முட்டைகள் வேண்டும். யாராலும் வெல்ல முடியாத மிகுந்த பலசாலியான இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் என வரம் கேட்டாள். காசியப்ப முனிவரும் அதன் படியே வரம் அளித்தார்.
நாகர்களின் அவதாரம் : வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன்
வினதையின் முட்டைகள் முதலில் குஞ்சு பொறித்து விடக் கூடாது என கத்ரு சதி வேலையில் ஈடுபட்டாள். அதன் படி, 500 ஆண்டுகளுக்கு பிறகு கத்ருவின் 1000 முட்டைகளும் பொறிந்து, நாகங்கள் வெளிப்பட்டனர். அதிலிருந்து தோன்றியவர்கள் தான் வாசுகி, ஆதிசேஷன், கார்கோடகன் உள்ளிட்ட நாகங்கள்.
அருனன் :
ஆனால் வினதையின் முட்டைகள் பொறியாமல் இருந்ததால் அவள், சத்ருவிற்கும் அவளது மகன்களுக்கும் அடிமையாக இருந்தாள். நீண்ட காலம் ஆகியும் தனக்கு கொடுக்கப்பட்ட முட்டைகள் பொறியாதால் சந்தேகமடைந்த வினதை, ஒரு முட்டையை எடுத்து உடைத்து பார்த்தாள். அதிலிருந்து முழுமை அற்ற உருவாக ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு அருனன் என பெயரிட்டாள்.
சூரியனை நோக்கி கடும் தவம் :
அந்த குழந்தையின் உருவத்தை மற்றவர்கள் கேலி செய்ததால், மனமுடைந்த அருனன், சூரியனை நோக்கி கடும் தவம் புரிந்து, அவருக்கு தேரோட்டியாக இருக்கும் வரத்தை பெற்றான்.
கருடன் அவதார தினம் :
பிறகு பல காலம் கழித்து மற்றொரு முட்டையில் இருந்து பெரிய இறக்கைகளுடன், பலசாலியாக கருடன் பிறந்தார். நாகர்களும், கருடனும் அவதரித்த தினமே நாக சதுர்த்தி மற்றும் கருட பஞ்சமி தினங்களாக கொண்டாடப்படுகின்றன.
மகாவிஷ்ணுவிற்கு வாகனம்
நாகர்கள் முதலில் பிறந்ததால் நாக சதுர்த்தி முதலிலும், கருட பஞ்சமி மறுநாளும் வருகிறது. தன்னுடைய தாய் அடிமையாக இருப்பதை கண்டு மனம் வேதனை அடைந்த கருடன், கடும் தவம் இருந்து மகாவிஷ்ணுவிற்கு வாகனமாக இருக்கும் வரத்தை பெற்றார். அதோடு தன்னுடைய தாயையும் அடித்தனத்தில் இருந்த மீட்டார்.
அடிமைத்தனத்தை மீட்ட கருடன் :
மற்றொரு கதையாக, தன்னுடைய தாய் நாகர்களுக்கு அடிமையாக இருப்பது பற்றி தாயிடம் காரணம் கேட்டார் கருடன். வினதையும் நடந்தவற்றை கூறினாள். இந்த அடிமைதனம் நீங்க தாங்கள் என செய்ய வேண்டும் என கத்ருவிடமே சென்று கேட்டார் கருடன்.
அமிர்த கலசம்
அதற்கு அவள், தேவலோகத்தில் இருக்கும் அமிர்த கலசத்தை எடுத்து வந்து கொடுத்தால் அடிமைத்தனம் நீங்கும் என்றாள். அதன் படி கருடனும் பலருடனும் கடுமையாக சண்டையிட்டு அமிர்த கலசத்தை எடுத்து வந்து தன்னுடைய தாயை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டார்.
தன்னுடைய தாயையும், தன்னையும் அடிமைத்தனத்தில் இருந்த கருடன் மீட்ட தினத்தையே கருட பஞ்சமியாக கொண்டாடுவதாகவும் சொல்லப்படுகிறது.