ஆடி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரதம் வரலட்சுமி விரதம். திருமணமான சுமங்கலி பெண்கள் தங்கள் கணவரும், குடும்பத்தினரும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காகவும், திருமணம் ஆகாத பெண்கள் நல்ல கணவர் அமைய வேண்டும், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய வேண்டும் என்பதற்காக வரலட்சுமி நோன்பு இருந்து வழிபடுவது வழக்கம்.
சுபிட்சம், செல்வம், மகிழ்ச்சி
இந்த ஆண்டு வரலட்சுமி விரதம், பௌர்ணமியுடன் இணைந்து வருகிறது. இந்த நாளில் அம்பிகையை வீட்டிற்கு அழைத்து வழிபடுவது மிகவும் சிறப்பானது ஆகும். இதனால் வீட்டில் எப்போதும் சுபிட்சம், செல்வம், மகிழ்ச்சி நிலைத்திருக்கும் என்பது ஐதீகம்.
வரலட்சுமி விரத வரலாறு
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வழிபாட்டு மற்றும் விரத நாட்களும் அம்பிகையின் அருளை பெறுவதற்காக நாம் விரதம் இருந்து, வழிபடுவதற்கான நாள் ஆகும். ஆனால், இந்த இந்த நாளில் விரதம் இருந்து வழிபட்டால் என்னுடைய அருள் முழுமையாக கிடைக்கும் என சாருமதி என்ற பெண்ணிற்கு மகாலட்சுமியே குறித்துக் கொடுத்த நாள் தான் ஆடி மாதத்தில் வரக் கூடிய வரலட்சுமி விரத நாளாகும். அதனால் தான் மற்ற நாட்களை விட இந்த நாள் மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
வரங்களை பெறுவதற்கு உரிய நாள்
வரலட்சுமி விரதத்தை யார் வேண்டுமானாலும் கடைபிடித்து, மகாலட்சுமியை வழிபடலாம். திருமணமான பெண்கள், திருமணம் ஆகாத பெண்கள், கணவன் இல்லாத பெண்கள், ஆண்கள் என யார் வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம். மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து, பூஜை செய்து வழிபட்டு, பலவிதமான வரங்களை பெறுவதற்குரிய நாளாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.
வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 08ம் தேதி, ஆடி மாதத்தின் நான்காவது வெள்ளிக்கிழமையில் வருகிறது. இந்த நாளில் மாலையில் பௌர்ணமியும் இணைந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். வரலட்சுமி விரதம் என்பது மொத்தம் 3 நாட்கள் வழிபட வேண்டிய விரதமாகும்.
மூன்று வகைகளில் வரலட்சுமி விரத வழிபாட்டினை மேற்கொள்ளலாம். ஒன்று, மகாலட்சுமியின் படம் மட்டும் வைத்து வெள்ளிக்கிழமை மட்டும் வழிபடலாம். இரண்டாவது, மகாலட்சுமியின் படத்தை மனை மீது எழுந்தருளச் செய்தும், கலசம் அழைத்தும் வழிபடலாம்.
வியாழக்கிழமை அம்பிகையை வீட்டிற்கு அழைத்து, வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தை மேற்கொண்டு, சனிக்கிழமை புனர்பூஜை செய்து வழிபாட்டினை நிறைவு செய்யலாம். அல்லது வெள்ளிக்கிழமையே அம்பிகையை அழைத்து, அன்று ஒரு நாள் மட்டும் வழிபடலாம். அல்லது, வெள்ளிக்கிழமை அம்பிகையை அழைத்து, வழிபட்டு, சனிக்கிழமை வைத்திருந்து, ஞாயிற்றுக் கிழமை புனர்பூஜை செய்து வழிபாட்டினை நிறைவு செய்யலாம்.
அம்பிகையை வழிபடுவதற்கான நேரம்
ஆகஸ்ட் 08ம் தேதி அம்பிகையை அழைக்க,
காலை 6 மணி முதல் 07.15 மணி வரை
பூஜை செய்வதற்கான நேரம்:
ஆகஸ்ட் 08ம் தேதி : காலை 9 மணி முதல் 10.20 மணி வரை, மாலை 6 மணிக்கு மேல்
ஆகஸ்ட் 09ம் தேதி : காலை 07.40 மணி முதல் 08.55 மணி வரை, காலை 10.40 மணி முதல் பகல் 12 மணி வரை
ஆகஸ்ட் 10ம் தேதி : காலை 7 மணி முதல் 9 மணி வரை, காலை 10 மணி முதல் 11.45 மணி வரை
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்கும் முறை
மகாலட்சுமியின் படம் வைத்து எளிமையாக வழிபடுபவர்கள், ஆகஸ்ட் 08ம் தேதியன்று காலை வழிபாட்டிற்காக சொல்லப்பட்ட நேரத்தில் மகாலட்சுமியின் படத்திற்கு பூக்கள் சூட்டி, தீப தூப ஆராதனை காட்டி, தெரிந்த ஸ்லோகங்களை சொல்லி, நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும். மனையில் படம் வைத்தும், கலசம் அமைத்து வழிபடுபவர்கள், அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் அம்பாளின் படம் மற்றும் கலசத்தை வைத்து, "தாயே மகாலட்சுமி, எங்களின் வீட்டிற்கு வரமகாலட்சுமியாக எழுந்தருளி எங்களின் பூஜைகளை ஏற்றுக் கொண்டு, எப்போதும் எங்களின் வீட்டில் அனைத்து வளங்களும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிலைத்திருக்க அருள் செய்ய வேண்டும்" என வேண்டிக் கொண்டு உள்ளே எடுத்து வந்து, பூஜைக்காக தயார் செய்து வைத்துள்ள மனையில் எழுந்தருள செய்ய வேண்டும்.
கலசம் அமைக்கும் முறை
கலசம் தயாரிக்க எவர்சில்வர் தவிர்த்து மற்ற உலோகங்களால் ஆன சொம்பினை பயன்படுத்த வேண்டும். கலசத்தில் தண்ணீர் நிரப்பி வழிபடுபவர்கள் அதற்குள் எலுமிச்சம் பழம், மஞ்சள் தூள், ஏலக்காய், வாசனை திரவிய பொடி, சில நாணயங்கள் ஆகியவற்றை சேர்த்து கலசம் அமைக்க வேண்டும்.
ஒரு மனைப்பலகையில் கோலமிட்டு அதன் மீது வாழை இலை அல்லது தாம்பாலம் வைத்து, அதன் மீது பச்சரிசி அல்லது நெல் பரப்பி, அதற்கு மேல் கலசத்தை வைக்க வேண்டும். கலசத்திற்குள் அரிசி போடுவதாக இருந்தால் முக்காமல் பாகம் அளவிற்கு பச்சரிசி நிரப்பிக் கொள்ளுங்கள். எலுமிச்சம் பழம், விரளி மஞ்சள், 9 அல்லது 11 நாணயங்கள், ஜாதிக்காய், மாசிக்காய், ஏலக்காய், கிராம்பு, காலோத கருகமணி ஆகியவற்றை சேர்த்து, கலசத்திற்கு மேல் மாவிலை வைத்து, மஞ்சள் தடவி தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். அம்பாளின் முகம் இருந்தால் அதை வைத்து அலங்காரம் செய்து கொள்ளலாம். அம்பாளுக்கு புது வஸ்திரம் அல்லது புடவை அல்லது ஜாக்கெட் துணி வாங்கி அதை சுற்றி அலங்காரம் செய்து கொள்ளலாம்.
வரலட்சுமி விரதம் வழிபாட்டு முறை
முதலில் குலதெய்வத்தையும், பிறகு இஷ்ட தெய்வத்தை, அதன் பிறகு விநாயகரையும் வணங்கி விட்டு, வரலட்சுமி விரத வழிபாட்டினை துவக்க வேண்டும். வியாழக்கிழமை அம்பிகையை வீட்டிற்கு அழைத்தால் அன்றைய தினம் வெண் பொங்கல், சுண்டல் ஏதாவது நைவேத்தியமாக படைத்து வழிபடலாம். மறுநாள் வெள்ளிக்கிழமை, அன்று ஆடித்தபசும் கூட அன்றைய தினம் அம்பிகையை வீட்டிற்கு அழைப்பது மிக சிறப்பானது. குறிப்பிட்ட நேரத்தில் அம்பிகையை வீட்டிற்கு அழைக்க வேண்டும்.
தாமரை, அரளி, மரிக்கொழுந்து, மருவு, மல்லி, முல்லை என எந்த பூ கிடைக்கிறதோ அதை வாங்கிக் கொள்ளலாம். கிடைக்கும் மலர்களைக் கொண்டு அம்பாளுக்குரிய துதிகளை பாடி, அர்ச்சனை செய்யுங்கள். கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம் என எது தெரிகிறதோ அதை சொல்லி வழிபடலாம். அம்பாளுக்கு நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், இட்லி, வடை, சுண்டல், புளியோதரை என எது வேண்டுமானாலும், எத்தனை வகை வேண்டுமானாலும் செய்து வைக்கலாம். இது தவிர முறுக்கு, சுசியம், அப்பம், லட்டு, அதிரசம் என பலகார வகைகளும் செய்து படைக்கலாம். எதுவும் செய்ய முடியாதவர்கள் எளிமையாக சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், பருப்பு பாயசம் ஆகியவற்றை படைத்து வழிபடலாம்.
நோம்பு சரடு கட்டும் முறை
அம்பிகைக்கு பூஜை செய்து வழிபட்ட பிறகு பூஜையில் வைத்த நோம்பு கயிற்றை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து கட்டிக் கொள்ளலாம். அல்லது கணவர் கையால் கொடுத்து கட்டிக் கொள்ளலாம். மகாலட்சுமிக்கு பூஜை செய்த பிறகு வீட்டில் உள்ள மூத்த சுமங்கலி பெண்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.
யாராவது 3 சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கள பொருட்கள் கொடுத்து, அவர்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு கொடுக்க வேண்டும். வீட்டில் யாரும் இல்லை என்பவர்கள் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் அல்லது அருகில் உள்ள கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இந்த மங்கல பொருட்களை கொடுக்கலாம்.
புனர்பூஜை செய்யும் முறை
வழிபாட்டினை நிறைவு செய்த பிறகு அந்த கலசம் அல்லது படத்தை அப்படியே எடுத்துச் சென்று வீட்டின் சமையல் அறையில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் வைத்து, "எப்போதும் எங்களின் வீட்டில் அன்னலட்சுமியாக நிலையாக வாசம் செய்து, அன்னக்குறை என்றும் ஏற்படாமல் செய்ய வேண்டும். எங்களுடைய குடும்பத்தில் எப்போதும் இருந்து எங்களுக்கு அருள் செய்ய வேண்டும்" என வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு படத்தை பூஜை அறையில் வைத்து விடலாம்.
கலசத்தில் நீர் நிரப்பி வழிபட்டவர்கள், கலசத்தில் போட்ட நாணயங்களை மஞ்சள் துளியில் முடிந்து, பணப்பெட்டியில் வைத்து விடலாம். கலசத்தில் நிரப்பிய நீரை வீடு முழுவதும் தெளித்து விட்டு, மீதமுள்ள தண்ணீரை கால் படாத இடத்தில் கொட்டி விடலாம். அரிசி வைத்து வழிபட்டவர்கள் அந்த அரிசியில் அம்மனுக்கு நைவேத்தியம் செய்து படைத்து மற்றவர்களுக்கு கொடுத்து, நாமும் சாப்பிடலாம். அல்லது அதை வைத்திருந்து கிருஷ்ண ஜெயந்திக்கு பலகாரங்கள் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.