Type Here to Get Search Results !

டிச.8,காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்



காஞ்சிபுரம், செப்.29:

பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி நடைபெற இருப்பதாக கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயில்.சுமார் 1300 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு அறநிலையத்துறை ஆணையர் மற்றும் அரசு நிதி ரூ.21 கோடியும், கோயில் நிதி 7 கோடியும்,உபயதாரர் நிதி ரூ.79 லட்சம் உட்பட மொத்தம் 28 கோடியில் கோயில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.


கடந்த 28.6.23 ஆம் தேதி முதல் முதலாக பாலாலயம் செய்யப்பட்டு தெற்கு ராஜகோபுரம், 4 ஆம் பிரகார சந்நிதிகள், ஆகியன திருப்பணி செய்யப்பட்டது.


2 வதாக கடந்த 11.2.24 ஆம் தேதி ரிஷி கோபுரம், 2 ஆம் பிரகார சந்நிதிகள் திருப்பணிக்காக 2 வது பாலாலயமும்,கடந்த 10.2.25 ஆம் தேதி நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி உட்பட பல்வேறு சந்நிதிகளுக்கும் 3 வது பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.



திருக்கோயில் மூலவர் மணல்லிங்கமாக,சுயும்புவாக ஏகாம்பரநாதர் இருப்பதால் கருவறை திருப்பணிக்கென 4 வது பாலாலயம் கடந்த 6.6.25 ஆம் தேதி நடைபெற்றது.


ஆலயத்தில் உள்ள பல்லவ கோபுரம்,தெற்கு ராஜகோபுரம்,1000 கால் மண்டபம் மற்றும் அதன் மேல்தளம்,கம்பாநதி மற்றும் சிவகங்கை தீர்த்தக்குளம்,முதல் மற்றும் 2 ஆம் பிரகாரம், நடராஜர் சந்நிதி ஆகியன பழுதுபார்த்து புதுப்பிக்கப்பட்டுள்ளது.மேற்கு ராஜகோபுரம், இரட்டை திருமாளிகை,பௌர்ணமி மண்டபம்,தவன உற்சவ மண்டபம், சிவகாமி சந்நிதி ஆகிய திருப்பணிகள் நிறைவுபெறாமல் உள்ளது.


சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் முதல் பாலாலய பூஜை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு திருவிழாக்கள் எதுவும் கும்பாபிஷேக திருப்பணிகள் காரணமாக நடைபெறாமல் இருந்து வந்தது.




கும்பாபிஷேகம் நடத்த தேதி நிர்ணயம் செய்திருப்பது, கும்பாபிஷேகத்திற்கு பின்னர் அனைத்து திருவிழாக்களும் நடைபெறும் என்பதாலும் சிவனடியார்கள், பக்தர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு விரைவில் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்து கும்பாபிஷேகம் தொடர்பான யாகசாலை பூஜை விபரங்கள், கலைநிகழ்ச்சிகள் குறித்து அறிவிக்க இருப்பதாகவும் கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.