காஞ்சிபுரம், செப்.21:
அத்திவரதர் புகழப் பெற்றது காஞ்சிபுரத்தில் உள்ள பெருந்தேவித்தாயார் சமேத வரதராஜசுவாமி கோயில். இக்கோயிலில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமி ஆலயத்திலிருந்து கோயில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சநேயர் சந்நிதிக்கு சென்று ஆலயம் திரும்பினார்.
ஆலயத்தின் நுழைவுவாயிலில் உற்சவர் பெருந்தேவித் தாயாருடன் ஆலய வளாகத்தில் உள்ள 100க்கால் மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சலில் இருவரும் அமர்ந்தவாறு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது. பின்னர் கோயில் அலங்கார மண்டபமான கண்ணாடி அறைக்கு எழுந்தருளினார்.
வரும் அக்.2 ஆம் தேதி வியாழக்கிழமை விஜயதசமித் திருநாளையொட்டி பெருமாள் குதிரை வாகனத்தில் ஆலயத்தில் உள்ள வன்னிமரத்தில் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
அதே நாளில் தூப்புல் தேசிகன் மங்களாசாசனமும், ஆலயத்தில் உள்ள தேசிகன் சுவாமிகள் சாற்றுமுறை உற்சவம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஆலயத்தின் உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி தலைமையில் பட்டாச்சாரியார்கள்,கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.