தமிழ் ஆண்டின் ஆறாவது மாதமாக வரும் புரட்டாசி மாதம் ஆன்மிக ரீதியாக மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகள் மிகுந்த புண்ணியத்தை தரக்கூடிய நாளாக கருதப்படுகிறது. பெரியவர்கள் கூறுவதாவது, ஒருவரால் முழு மாதமும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டுமாவது விரதம் இருந்து, பக்தியுடன் வழிபட்டால் அந்த மாதம் முழுவதும் விரதம் இருந்ததற்கு சமமான பலன் கிடைக்கும் என்பதாகும்.
கன்னி மாதம் - ருணம், நோய், சத்ரு பாவத்தை குறிக்கும்
புரட்டாசி மாதத்தில் சூரிய பகவான் கன்னி ராசியில் பயணிப்பதால், இதற்கு கன்னி மாதம் என்றும் பெயர். ஜோதிட சாஸ்திரப்படி, ஆறாவது இடம் என்பது ருணம், நோய், சத்ரு பாவத்தை குறிக்கும். அதனால் இந்த மாதத்தில் உடல் பாதிப்புகள், நோய்கள் பரவுதல் போன்றவை இயல்பாக ஏற்படும். இதனை தவிர்க்கவும், உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்திருக்கவும் விரதம் இருக்க வேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன.
சனிக்கிழமை மற்றும் சனீஸ்வர வழிபாடு
வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் கொண்டதாக இருக்கும். அதில் சனிக்கிழமையோ சனி பகவானுக்குரிய நாள். மனிதனின் வாழ்க்கையில் நன்மை தீமைகளை, செய்த பாவ நன்மைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குபவர் சனி பகவான். அதனால் சனிக்கிழமையில் சனீஸ்வரனை துதித்து, அவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் கலந்த உணவு நிவேதனம் செய்து, நீல நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது வழக்கம். சிலர் அன்றைய தினம் அசைவ உணவை தவிர்த்து, ஒரு வேளை மட்டுமே உணவு உண்டு விரதம் இருப்பதையும் கடைபிடிக்கிறார்கள்.
புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுவதால் மூன்று வகையான ஆன்மிக பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பித்ருக்களின் ஆசி
முதலாவது பித்ருக்களின் ஆசி. அந்த நாளில் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைப்பது முன்னோர்களுக்கான வழிபாடாகக் கருதப்படுகிறது.
தெய்வ வழிபாடு
அடுத்ததாக தெய்வ வழிபாடு – பெருமாள், ஆஞ்சநேயர், ஐயப்பன், முனீஸ்வரர் போன்ற தெய்வங்களை தரிசித்து வழிபடுவதால் தெய்வ அருள் கிடைக்கிறது.
தேவதா பலன்
மூன்றாவது தேவதா பலன் – நவகிரகங்களில் சனிக்கிழமையோ சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட நாள் என்பதால், அவரின் கருணை கிடைக்கிறது.
பாவ நிவர்த்தி
இந்த நாளில் பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வதும், அங்கு கிடைக்கும் தீர்த்தத்தை வீடு கொண்டு வந்து குடும்பத்தோடு பகிர்ந்து கொள்வதும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. வழக்கமாக சனிக்கிழமைகளில் துளசி மற்றும் பிரசாதம் வாங்கி வருவது வழக்கம் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமையில் மட்டும் பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்து வருவதை வேதங்கள் சிறப்பாகச் சொல்கின்றன. அந்த தீர்த்தம் பாவ நிவர்த்தியும், நோய் தீர்ப்பும் தரும் என்று நம்பப்படுகிறது. சிலர் வீட்டில் பெருமாள் படத்திற்கு படையல் வைத்து வழிபடுவார்கள்; சிலர் முன்னோர்களின் படத்திற்கு படையல் வைத்து, பெருமாள் கோவிலில் கிடைத்த தீர்த்தத்தை இணைத்து நைவேத்யம் செய்வார்கள். இதனை “மோட்ச தீர்த்தம்” என்று அழைக்கப்படுகிறது.
ஆன்மிக ரகசியம்
புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பித்ருக்களின் ஆசி, தெய்வத்தின் அருள், சனீஸ்வரனின் கருணை என மூன்று விதமான பலன்களும் சேர்ந்து கிடைக்கிறது. அது மட்டுமல்ல, ஒருவர் செய்த பாவ நிவர்த்தியுடன், முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி, அவர்கள் மோட்சம் அடைவதற்கான வாய்ப்பும் உருவாகிறது. அதனால் அந்த புண்ணியமும் குடும்பத்தாருக்கு சேர்ந்து விடுகிறது. எனவே, வைகுண்ட ஏகாதசி விரதத்துக்கு இணையான பலனை தரக் கூடியது புரட்டாசி சனிக்கிழமை விரதமாகும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். புரட்டாசி ஏகாதசி விரதம் மற்றும் சனிக்கிழமை விரதம் என்பது ஆயிரம் யாக பலன் தரும் புனித நாளாக கருதப்படுகிறது.
ஸ்ரீமன் நாராயணனின் திருவடிகள் காண்பது பாவநாச தரிசனம்