காஞ்சிபுரம், செப்.29:
பெரியகாஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் கோயில்.இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி மூலவரும்,உற்சவரும் தினசரி வெவ்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்..
7 வது நாள் நிகழ்வாக நடைபெற்ற சீமந்த விழாவையொட்டி மூலவரும், உற்சவரும் கர்ப்பிணித்தாயாக சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.முன்னதாக புத்தேரி தெரு தபசு விநாயகர் ஆலயத்திலிருந்து மூலவர் ரேணுகாம்பாளுக்கு கோயில் நிர்வாகம் மற்றும் ஏராளமான பெண்களும் சீர்வரிசைப் பொருட்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக ஆலயத்துக்கு வந்து சேர்ந்தனர்.
கடந்த ஆண்டு வேண்டிக்கொண்டபடி பொன்னம்பலம் ஆருத்ரா தம்பதியினருக்கு ஆண்குழந்தை பெற்றதையடுத்து ஆலயத்தில் குழந்தையின் பெற்றோர்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயங்களை துலாபாரமாக கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.
திரளான கர்ப்பிணிப் பெண்களும் கலந்து கொண்டு கர்ப்பிணித்தாயாக அருள்பாலித்த ரேணுகாம்பாளுக்கு வளையல் அணிவித்தும் தரிசனம் செய்தனர்.
காஞ்சி நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகளும்,விழாக்குழுவினரும் இணைந்து செய்திருந்தனர்.