தேவர்களுக்கு தீங்கிழைத்து வந்த வல்லன் எனும் அசுரனை அழித்து முருகப்பெருமான் எழுந்தருளியதால் வல்லக்கோட்டை என்று வழங்கப்படும் இத்தலத்திற்குக் கிருத்திகை, விசாகம், சஷ்டி, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் வந்து வழிபடுவோருக்கு சொந்த வீடுமனை, திருமணம், பதவி உயர்வு, வளமான வாழ்வு கிடைப்பதாக ஐதீகம்.
புராண காலத்தில் தேவர்களின் தலைவன் இந்திரன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப் பெருமானைப் பூஜித்து இந்திராணியைத் திருமணம் செய்து கொண்டான். 6 வாரங்கள் வல்லக்கோட்டைக்கு வந்து பூஜிப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இத்திருக்கோயில் முருகப்பெருமானின் சிறப்பாகும். பலர் விரதமிருந்து வல்லக்கோட்டைக்கு வந்து வணங்கி கல்யாண பாக்கியம் பெற்றுள்ளனர்.
அதேபோல இஷ்வாகு வம்சத்து அரசன் பகீரதன் வல்லக்கோட்டைக்கு வந்து முருகப்பெருமானை வணங்கி இழந்த செல்வங்களையும் அரசாட்சியையும் பெற்றான். அதனால் பதவி உயர்வு வழங்கும் தலமாகவும் இது விளங்குகின்றது.
பிரசித்திபெற்று விளங்கும் வல்லக்கோட்டையில் முருகப்பெருமானுக்கு உகந்த கந்தசஷ்டி உற்சவம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை காலையில் தொடங்கியது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா நோய் தடையின் காரணமாகவும் இரண்டு ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்று வந்தமையாலும் இங்கு கந்தசஷ்டி உற்சவம் நடைபெறவில்லை. இந்நிலையில் சுமார் ரூ.1.50 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த ஜூலை 7 ஆம் தேதி விமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு பிறகு இங்கு வழக்கமான உற்சவங்கள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கந்தசஷ்டி உற்சவம் புதன்கிழமை காலையில் கோபூஜையுடன் தொடங்கியது. 28 ஆம்தேதி செவ்வாய்கிழமை வரை 7 நாட்கள் உற்சவம் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டியை முன்னிட்டு நாள்தோறும் மூலவருக்கு மூன்றுவேளைகளில் சிறப்பு மகா அபிஷேகமும் உற்சவர் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு நாட்களும் சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை, விசேஷ யாகபூஜைகளும் நடைபெற உள்ளன.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு ஆறுநாட்களும் வெவ்வேறு அலங்காரங்களில் அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.
வரும் 26 ஆம் தேதி ஞாயிறன்று முருகப்பெருமான் வல்லம் கிராமத்தில் உள்ள அருள்மிகு சடையீஸ்வரர் திருக்கோயிலுக்கு எழுந்தருள உள்ளார். அங்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வேல் வாங்குதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உற்சவத்தின் சிகரமாக 27 ஆம் தேதி திங்களன்று பிற்பகல் 3 மணிக்கு உற்சவர் சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரங்கள் செய்யப்பட்டு மாலை 6 மணிக்கு வடக்கு மாட வீதியில் சூரசம்காரம் நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து 28 ஆம் தேதி செவ்வாயன்று மாலையில் திருக்கல்யாண உற்சவமும் சுவாமி வீதி உலாவும் நடைபெற உள்ளது.
கந்தசஷ்டி உற்சவம் தொடங்கியதை முன்னிட்டு புதன்கிழமை மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. சஷ்டி மண்டபத்தில் உற்சவர் ஆறுமுக சுவாமிக்கு விசேஷ பூஜைகள் செய்யப்பட்டு சத்ருசம்கார திரிசதீ அர்ச்சனை தொடங்கி நடைபெற்று வருகிறது.
உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு பச்சைசாத்தி அலங்காரத்தில் அருள்பாலித்து வருகிறார்.
காலையில் ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்து சஷ்டி மாலை அணிந்து கந்தசஷ்டி விரதம் தொடங்கினர்.
கந்தசஷ்டியை முன்னிட்டு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் பருப்பு பாயசம், சர்க்கரை பொங்கல், வெண்பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தயிர்சாதம் ஆகிய ஆறு வகை பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.
கந்தசஷ்டி சூரசம்கார உற்சவ ஏற்பாடுகளை மண்டல இணை ஆணையர் திரு.சி.குமரதுரை அவர்கள் அறிவுரையின்படி, திருக்கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் ஜா.செந்தில்தேவ்ராஜ், அறங்காவலர்கள் த.விஜயகுமார், கலைச்செல்வி கோபால், கே.மோகனகிருஷ்ணன், பு.செல்வகுமரன் செய்து வருகின்றனர்.
.png)