Type Here to Get Search Results !

திருப்போரூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

 


திருப்போரூர்: 


திருப்போரூரில் உள்ள புகழ் பெற்ற முருகன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா இன்று புதன்கிழமை காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் வெகு உற்சாகமாக தொடங்கியது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைந்தொடர்ந்து காலை பல்லக்கு உற்சவத்திலும், இரவு 7 மணிக்கு கிளி வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலாவும், மறுநாள் 23-ம் தேதி வியாழக்கிழமை இரவு ஆட்டுக்கிடா வாகனம், 24-ம்தேதி வெள்ளிக்கிழமை இரவு புருஷா மிருக வாகனம், 25-ம்தேதி சனிக்கிழமை இரவு பூத வாகனம், 26-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அன்ன வாகனத்திலும் தினம் ஒரு சூரபொம்மையுடன் மேளதாளம், வான வேடிக்கைகளுடன் வீதி உலா நடைபெறும்.


விழாவின், முக்கிய நிகழ்ச்சியாக 27-ம் தேதி திங்கட்கிழமை, மாலை 6 மணி அளவில் முருகப்பெருமான் வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி தங்கவேல் கொண்டு சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், இரவு தங்க மயில் வாகனத்தில் முருகப் பெருமான் வீதி உலா நடைபெறும். இதையடுத்து மறுநாள் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவமும், இரவு திருமண கோலத்தில் முருகப்பெருமான் யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெறுகிறது.



கந்தசஷ்டியை ஒட்டி இன்று முதல் தினமும் கோயிலில் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் (தக்கார்) கார்த்திகேயன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் செய்துள்ளனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.