காஞ்சிபுரம், நவ.21:
மன்னர் கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்து பல்வேறு ஆன்மீகப்பணிகளை செய்த பெருமைக்குரியவர் லட்சுமி குமா தாத தேசிகன்.ஆண்டு தோறும் இவரது அவதார தினமான கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத் தன்று மட்டும் உற்சவருக்கு ரத்தின அங்கி சாற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உற்சவர் வரதராஜசுவாமிக்கு ரத்தின அங்கி சாற்றப்படுவது வழக்கம்.நிகழாண்டு லட்சுமி குமார தாத தேசிகனின் அவதார தினத்தையொட்டி ஸ்ரீதேவி,பூதேவியருடன் உற்சவர் வரதராஜசுவாமியும்,பெருந்தேவித்தாயாரும் ரத்தின அங்கி அணிந்தவாறு தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளினர்.
பின்னர் தேசிகன் சந்நிதியில் லட்சுமி குமார தாத தேசிகனுக்கு தரிசன தாம்பூல மரியாதை மற்றும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து ரத்தின அங்கி அணிந்தவாறு பெருமாளும், தாயாரும் ஆலய வளாகத்தில் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் நாதசுவர இன்னிசையுடன் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதன் தொடர்ச்சியாக உற்சவர் வரதராஜசுவாமிக்கும்,தாயாருக்கும் சிறப்புத் திருமஞ்சனமும் மாலையில் மீண்டும் பெருமாளும் தாயாரும் ஆழ்வார் சுற்றுப்பிரகாரத்தில் வலம் வந்தனர்.நிறைவாக இருவரும் அவரவர் சந்நிதிக்கு எழுந்தருளினர்.
வரதராஜசுவாமியின் ரத்தின அங்கி சேவைக் காட்சியைக் காண ஆந்திரா,கர்நாடகா மற்றும் தமிழகம் முழுவதுமிருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஆர்.ராஜலட்சுமி தலைமையில் கோயில் பட்டாச்சாரியார்கள்,பணியாளர்கள் செய்திருந்தனர்.
.png)