Type Here to Get Search Results !

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு புதிய தங்கத்தேர்... விரைவில் வெள்ளோட்டம்


காஞ்சிபுரம், நவ.1:

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு 23 கிலோ தங்கத்தில் 23 அடி உயரத்தில் புதிய தங்கத்தேர் செய்யும் பணி நிறைவு பெறும் நிலையில் இருப்பதால் விரைவில் வெள்ளோட்டம் விட இருப்பதாக அருள்மிகு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.



பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏலவார் குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில்.இக்கோயில் கும்பாபிஷேக திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பில் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.



வரும் டிசம்பர் 8 ஆம் தேதி இக்கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்த அரசு திட்டமிட்டு திருப்பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.இக்கோயிலுக்கு புதியதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.தங்கத்தேர் செய்யும் பணி 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இடையில் நின்று போய் இருந்தது.



இதையறிந்த காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பெரும் முயற்சியால் அருள்மிகு ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு தங்கத்தேர் செய்யும் பணியும் மீண்டும் தொடங்கி தொடர்ந்து இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.


மரம் மற்றும் தங்க வேலை செய்யும் 40க்கும் மேற்பட்ட சிற்பிகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் தங்கத்தேர் செய்யப்பட்டு பணிகள் அனைத்தும் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.


தங்கத்தேரின் உயரம் 23 அடி,நீளம் 15 அடி,அகலம் 13 அடியில் மொத்தம் 23 கிலோ தங்கத்தில் தங்கத்தேர் செய்யும் பணிகள் நடைபெற்று தங்கத்தகடுகள் தேரில் பொருத்தும் பணிகள் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா பெரியவர் சுவாமிகள் மணி மண்டபத்தில் நடைபெற்று வருகின்றன.


இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் பி.கே.சேகர்பாபு, காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, ஓரிக்கை மணி மண்டப நிர்வாக அறங்காவலர் மணி ஐயர் மற்றும் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள்ஆகியோரின் ஒத்துழைப்போடும் தங்கத்தேர் உருவாக்கப்பட்டு வருகிறது.


புதிய தங்கத்தேரை ஏகாம்பரநாதர் கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக நிறுத்துவதற்காக ரூ.18 லட்சம் மதிப்பில் மண்டபம் ஒன்றும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


தங்கத்தேரில் தகடுகள் பொருத்தும் பணி முழுமையாக நிறைவு பெற இருப்பதால் விரைவில் வெள்ளோட்டம் விட இருப்பதாகவும் ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.