காஞ்சிபுரம், டிச.14:
பெருமாள் ஆமை(கச்சம்)வடிவில் சிவனை வணங்கிய திருக்கோயிலாக இருந்து வருவது காஞ்சிபுரத்தில் உள்ள கச்சபேசுவரர் திருக்கோயில்.இக்கோயிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடை ஞாயிறு திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
மண்சட்டியில் மாவிளக்கு ஏற்றி அதை தலையில் சுமந்து கொண்டு ஆலயத்தை வலம் வந்து பூஜைகள் செய்வார்கள்.இந்நிகழ்வு கடைஞாயிறு திருவிழா என அழைக்கப்படுகிறது.
மண்சட்டியில் மஞ்சள் பூசி அதற்குள் பச்சரிசி மாவு,வெல்லம் சேர்த்து மாவிளக்கு செய்தனர். பின்னர் அந்த மாவிளக்கிற்குள் அகல் விளக்கில் நெய்தீபம் ஏற்றி, தேங்காய்,பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை வைத்து தலைமையில் சுமந்து கொண்டு ஆலயத்தை வலம் வந்தார்கள்.
கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையையொட்டி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் தலையில் அகல்விளக்கு வைக்கப்பட்ட மண்சட்டியுடன் வலம் வந்து வழிபாடு செய்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
முன்னதாக கடை ஞாயிறு விழாவையொட்டி ஆலயத்தில் காலையில் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.
விழாவில் மூலவரை விரைவாக தரிசிக்க கோயில் நிர்வாகம் ரூ.50 கட்டணமாக வசூலித்தாலும் பக்தர்கள் ரசீது பெற்றுக் கொண்டு தலையில் அகல்விளக்குடன் கூடிய மண்சட்டியுடன் வரிசை, வரிசையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
பக்தர்கள் கூட்டம் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
.png)