காஞ்சிபுரம் | ஜனவரி 1, 2026
காஞ்சிபுரம் நகரின் மிகத் தொன்மையான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவிலில், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு, அழிந்து வரும் பாரம்பரியக் கலையான பொம்மலாட்ட நிகழ்ச்சி 30-வது ஆண்டாக மிகவும் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஐந்து நாட்கள் கலை விருந்து:
ஆருத்ரா தரிசனப் பெருவிழா வரும் ஜனவரி 3-ஆம் தேதி (சனிக்கிழமை) அதிகாலை நடைபெற உள்ளதை முன்னிட்டு, கோவில் நிர்வாகம் மற்றும் காந்தி ரோடு ஜவுளி வியாபாரிகள் சத்திர தரும பரிபாலன மகமை சங்கம் சார்பில் டிசம்பர் 29 முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்குத் தொடர்ந்து பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முருகன் திருக்கல்யாணம்:
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சுவாமி புறப்பாட்டைத் தொடர்ந்து, கும்பகோணம் ஸ்ரீ முருகன் சங்கீத பொம்மலாட்ட சபையினரின் 'முருகன் திருக்கல்யாணம்' பொம்மலாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. தத்ரூபமான அசைவுகள் மற்றும் இசையுடன் கூடிய இந்தப் பொம்மலாட்டம் காண்போரைக் கட்டிப்போட்டது.
மக்களின் பேராதரவு:
நவீன யுகத்தில் மெல்ல மறைந்து வரும் இக்கலையை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து தரையில் அமர்ந்து ஆர்வத்துடன் கண்டு களித்தனர். குறிப்பாகச் சிறுவர்களுக்கு இந்தப் பொம்மலாட்டம் ஒரு புதிய அனுபவமாகவும், கலாச்சாரப் பாடமாகவும் அமைந்தது.
.png)