காஞ்சிபுரம், மார்ச் 06:
புதிய சன்னதிகள் மற்றும் யாகசாலை:
இந்த ஆலயத்தில் சொர்ணவராகி மற்றும் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி ஆகிய தெய்வங்கள் புதிதாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கோயில் முழுவதும் புதுப்பிக்கப்பட்டது. குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைமை சிவாச்சாரியார் கே.ஆர். காமேசுவர சிவாச்சாரியார் தலைமையில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. மார்ச் 5-ஆம் தேதி காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேரில் எழுந்தருளி ஆசியுரை வழங்கினார்.
கும்பாபிஷேக வைபவம்:
விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை மகா பூரணாகுதி தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, மங்கல மேள வாத்தியங்கள் முழங்க புனிதநீர்க்குடங்கள் கோபுர விமானங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. சரியாக காலை சுப முகூர்த்தத்தில் மூலவர் விமானம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்குக் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 21 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து மூலவர் கன்னியம்மன், சொர்ணவராஹி, சரபேஸ்வரர், லட்சுமி குபேரன், ஆஞ்சநேயர் மற்றும் சப்த கன்னியர்களுக்குச் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன.
கலைநிகழ்ச்சிகள் மற்றும் பங்கேற்பாளர்கள்:
விழாவையொட்டி கோயில் முழுவதும் மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாணவேடிக்கை, எம்.எஸ். நாகராஜன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை, பட்டிமன்றம், வில்லுப்பாட்டு மற்றும் பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத சுவாமிகள், வல்லக்கோட்டை முருகன் கோயில் செயல் அலுவலர் செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் (குட்டி), திமுக பிரமுகர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஜோதிடர் பிபிஎன். நடராஜன்-ஞானம்பாள் தம்பதியர் மற்றும் திருவேகம்பன் தெரு செங்குந்த மரபினர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
