தமிழ் மக்களின் வாழ்வில் மங்கல காரியங்களும், செல்வமும் பெருகும் உன்னதமான திருநாள் ஆடிப் பெருக்கு (ஆடி 18).
"ஆடிப் பெருக்கு தேடிப் பெருகும்" என்பது பழமொழி. ஆடி மாதத்தில் பெருகி வரும் காவிரித் தாயை வழிபட்டு, நம் வாழ்விலும் நன்மைகள் பெருக வேண்டும் என்று அன்னை காவிரியை மனதாரப் பூஜிக்கும் பொன்னான நாள் இது. இந்நாளில் ஆற்றங்கரை அல்லது வீட்டில் செய்யப்படும் எளிய வழிபாடுகள், குடும்பத்தில் வறுமையை விரட்டி வற்றாத தன பிராப்தியையும், மங்கல யோகத்தையும் அள்ளித் தரும்.
ஆடி 18-ஆம் நாளில் நாம் செய்யும் எந்த ஒரு நற்காரியமும், தான தர்மங்களும், வழிபாடுகளும் நம் குடும்பத்தில் பல மடங்கு பெருகும் என்பது சித்தர்களின் வாக்கு. இந்நாளின் ஆன்மீக சிறப்புகள், தாலி கயிறு மாற்றுவதற்கான சுப முகூர்த்த நேரம் மற்றும் வீட்டில் செய்ய வேண்டிய எளிய வழிபாட்டு முறைகளை விரிவாகப் பார்ப்போம்.
1. ஆடி பெருக்கின் ஆன்மீக & ஜோதிட முக்கியத்துவம்:
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் தக்ஷிணாயன புண்ணியகாலத்தின் தொடக்கமாகும். ஆடி 18-ஆம் நாளன்று நதிகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுவது போல, மனிதர்களின் வாழ்க்கையிலும் செல்வமும் நிம்மதியும் பெருக்க வேண்டும் என்பதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.
ஜோதிட ரீதியாக, நீர் ராசியான கடகத்தில் சூரியன் பயணிக்கும் காலத்தில் வரும் இந்த நாள், மஹாலக்ஷ்மியின் பரிபூரண அருளைத் தரும் உன்னதமான நாளாகக் கருதப்படுகிறது.
2. ஆடிப் பெருக்கு ஏன் கொண்டாடப்படுகிறது? (வரலாற்றுச் சிறப்பு)
ஆடி மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து ஆறுகளில் வெள்ளம் பெருகி வரும். புதுப்புனல் பாயும் இந்நாளைக் "காவிரித் தாயின் பிறந்தநாள்" போலக் கருதித் தமிழ் மக்கள் நன்றியுணர்வுடன் வழிபடுகின்றனர்.
- விவசாயமும் செழிப்பும்: உழவர்கள் நஞ்செய் நிலங்களில் வித விதைக்கவும், புதிய விவசாயப் பணிகளைத் தொடங்கவும் இந்த நாளைப் பரம சுப நாளாகக் கருதுகின்றனர்.
- ஸ்ரீரங்கம் ரங்கநாதர் வைபவம்: ஸ்ரீரங்கத்தில் காவிரித் தாய்க்குச் சீர்வரிசை அளிக்கும் வைபவம் ஆடிப் பெருக்கு அன்று மிகவும் பிரசித்தி பெற்றது.
3. தாலி கயிறு மாற்றும் சுப முகூர்த்த நேரம்:
சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்ய பலம் பெருகவும், கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத் துணை அமையவும் ஆடிப் பெருக்கு நாளன்று மஞ்சள் கயிறு மாற்றி வழிபடுவது வழக்கம்.
- தேதி: ஆகஸ்ட் 3, 2026 | திங்கட்கிழமை
- காலை சுப முகூர்த்த நேரம்: காலை 6:00 மணி முதல் 7:00 மணி வரை (உகந்த நேரம்)
- இரண்டாம் முகூர்த்த நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை
- அபிஜித் காலம் - 11:49 AM – 12:40 PM
- மாலை சுப முகூர்த்த நேரம் : 3.15 மணி முதல் 4.15 மணி
4. வீட்டில் ஆடிப் பெருக்கு பூஜை செய்யும் முறை:
- பூஜை அறை அலங்காரம்: வீட்டையும் பூஜை அறையையும் தூய்மை செய்து, பித்தளை அல்லது செம்புச் சொம்பில் சுத்தமான நீர நிரப்பி, அதில் சிறிது மஞ்சள் தூள், பச்சைக்கற்பூரம், நறுமணப் பூக்கள் போட வேண்டும்.
- மஞ்சள் விநாயகர்: ஒரு சிறிய பலகையில் கோலமிட்டு, மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்து அறுகம்புல் சாற்ற வேண்டும்.
- நைவேத்தியம்: ஆடிப் பெருக்கு நாளன்று சித்திரான்னங்கள் (சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம், புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம்) படைத்து வழிபடுவது மிகவும் விசேஷம்.
- மஞ்சள் கயிறு வழிபாடு: புதிய தாலிக்கயிறு அல்லது மஞ்சள் தோய்த்த நூலில் பூக்கட்டி வழிபாட்டில் வைத்து, பின்னர் பெரியோர்களின் ஆசி பெற்று கழுத்தில் அணிந்து கொள்ளலாம்.
5. ஆடிப் பெருக்கில் என்னென்ன செய்தால் செல்வம் பெருகும்?
- புதிய கணக்குத் தொடங்குதல்: தொழில் செய்பவர்கள் புதிய கணக்கு புத்தகங்கள் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் இது மிகச் சிறந்த நாள்.
- தங்கம் மற்றும் மங்கலப் பொருட்கள் வாங்குதல்: இந்நாளில் தங்கம், வெள்ளி, அரிசி, உப்பு, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கினால் வீட்டில் செல்வம் வற்றாமல் பெருகும்.
- தான தர்மங்கள்: ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் ஆடை தானம் செய்வதால் ஜாதகத்தில் உள்ள கடுமையான பாபக் கிரக தோஷங்கள் விலகும்.
பெருகி வரும் காவிரியைப் போல உங்கள் வாழ்க்கையிலும் கஷ்டங்கள் விலகி, சகல சௌபாக்கியங்களும் பெருக ஆடிப் பெருக்கு நாளில் காவிரித் தாயையும் மகாலக்ஷ்மியையும் மனதார வழிபடுவோம்!

