ஒவ்வொரு மனிதரும் வாழ்ந்து முடிந்த பிறகு வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்த்தால்.. இந்த கேள்விக்கு விடை தேடியபோது நான் படித்த இந்த சிறிய கதை அதற்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அந்தக் கதை...
ஒரு கிராமத்தில் பரம்பரை செல்வந்தராக வசிந்துவந்த ராஜாராம் வாழும்போது ஊரே போற்றும்படி மிக செல்வாக்காக வசித்து வந்தார். எல்லாருக்கும் வரும் வாழ்வின் இறுதிக்கட்டம் அவருக்கும் வந்தது. ஆம் அவர் இறந்து விட்டார். தனது இறப்பை உணரும் போது, அவர் எதிரே கடவுள் கையில் ஒருபெட்டியுடன் தோன்றினார். நீ பூமியை விட்டுச்செல்லும் நேரம் வந்து விட்டது வா மகனே என்றார். ஆச்சரியம் அடைந்த அவர் “இப்பொழுதேவா என்ற அவர், நான் நிறைய திட்டம் போட்டு வைத்துள்ளேன் அதையெல்லாம் யார் நிறைவேற்றுவது. என்னை நம்பியுள்ளவர்கள் என்ன செய்வார்கள் என்றார் சோகமாக,
அதைக்கேட்ட கடவுள்
“மன்னித்து விடு மகனே........ நீ இப் பூவுலகத்தை விட்டு செல்வதற்கானநேரம் இதுவே என்றார்.
சரி... நீங்கள் கையில் வைத்துள்ள பெட்டியில் என்ன தான் உள்ளது என்றார் செல்வந்தர்.
உன்னுடைய உடமைகள் தான் இந்த பெட்டியில் இருக்கின்றது என்றார் கடவுள்.
என்னுடைய உடமைகள் என்றால் பணம், ஆபரணங்கள் என நான் சேர்த்த சொத்துகள் உள்ளதா என்றார் செல்வந்தர்.
அவை அனைத்தும் இப்போது உன்னுடையவை அல்ல என்றார் அவை நீ பூமியில் வாழ்வதற்கானவை என்றார் கடவுள். அப்படியென்றால் என்னுடைய நினைவுகளா? இல்லவே இல்லை அவை கண்டிப்பாக உன்னுடையவை கிடையாது, அவை காலத்தின் கோலம் என்றார் கடவுள். குழப்பமடைந்த செல்வந்தர், பெட்டியில் பணமும் பொருட்களும் இல்லை என்றால் என்னுடைய திறமைகளா என்றார். அது எப்படி உன்னுடையதாகும் அவை சூழ்நிலைகளுடன் சம்பந்தப்பட்டது என்று கடவுள் சளைக்காமல் பதில் கூற, அப்ப எனது குடும்பமும் நண்பர்களுமா என்றார்.. இதைக்கேட்டு சிரித்த கடவுள் குடும்பமும் நண்பர்களும் நீ வாழ்வதற்கான வழி என்றுகூற,
இறுதியாக கேட்கிறேன் என் மனைவி மற்றும் மக்களுமா என்று மிகுந்த குழப்பத்துடன் கேட்டார் செல்வந்தர் ராஜாராம், அவர்கள் தான் நீ இறந்தபிறகும் பூமியில் வாழ்கிறார்களே அப்புறம் எப்படி அவர்கள் இந்த பெட்டியில் இருக்கமுடியும் என்ற கடவுள், உன் மனைவியும் மக்களும் உனக்கு சொந்தமானவர்கள் கிடையாது. அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று ஒரே போடாக போட்டார் கடவுள்.
நான் பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எதுவுமே இல்லை என்றால் எனது உயிரை சுமந்த எனது உடல் இந்த பெட்டியில் இருக்கிறதா என்ற செல்வந்தரின் கேள்விக்கு பதில் கூறிய கடவுள்
அதுவும் உன்னுடையது கிடையாது, உனது உடலும் குப்பையும் ஒன்று, இரண்டையும் வேண்டாம் என்று தீயில் இட்டு பொசுக்கி விட்டார்களே.
கடுப்படைந்த செல்வந்தர் உடலும் இல்லை என்றால் பெட்டியில் இருப்பது “என் ஆன்மாவா?” என்று கேட்க அதை மறுத்த கடவுள் இல்லவே இல்லை. அது மிகவும் பரிசுத்தமானது. எனவே அது என்னுடையது இனியும் உன்னை சோதிக்க விரும்பவில்லை. நீயே பார்த்துக்கொள் என பெட்டியை திறந்து காட்டினார்.
பெட்டியை பார்த்த செல்வந்தர் அதிர்ந்துபோனார். ஆம் அந்த பெட்டியில் எதுவும் இல்லை வெறுமையாக இருந்தது. கண்ணில் நீர் பெருகிய செல்வந்தர் நான் மிக பெரிய பணக்கார வம்சத்தை சேர்ந்தவன் ஆனால் என்னுடையது என்று எதுவுமே இல்லையா?” எனக்கேட்க,
இதுதான் உண்மை, வாழ்க்கை என்பது நீ கடக்கும் ஒவ்வொரு நொடிகளும் தான், நீ வாழும் ஒவ்வொரு நொடிகள் மட்டுமே உன்னுடையது. அந்த ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வதுடன், நல்ல செயல்களை மட்டும் செய்தால் மட்டுமே என்னை அடையமுடியும்.
எனவே ஒவ்வொரு நொடியும் உன்னுடைய வாழ்க்கையின் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள மறக்காதே அதுமட்டுமே நிரந்தரம் என்றார் கடவுள். ஒவ்வொரு மனிதரும் எவ்வளவு சொத்து சேர்த்து வைத்திருந்தாலும் இறுதியில் கொண்டு செல்வது எதுவுமில்லை.
வாழ்கின்ற நொடிகளில் நாம் செய்யும் நல்ல செயல்களே நாம் சென்ற பிறகும் இந்த பூவுலகில் நிலைத்து நிற்கும். வாழ்க்கை தொடரட்டும்... மகிழ்ச்சி பொங்கட்டும்...