ஜோதிடத்தில் பல தோஷங்கள் குறிப்பிடப்படுகிறது. அதில் முக்கியமானது நாக தோஷம். ஒருவருடைய ஜாதகத்தில் நாக தோஷம் அல்லது ராகு தோஷம் இருக்க பற்பல காரணங்கள் உள்ளன. இந்த தோஷம் காரணமாக பலருக்கு திருமண தடை ஏற்படும், திருமணம் ஆன பிறகும் குழந்தை பாக்கியம் பெறுவதில் தடை ஏற்படும், செய்யும் தொழிலில் திடீர் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு தோல் சம்மந்தமான வியாதிகளும் வரக்கூடும்.
இந்த நாக தோஷத்திலிருந்து விடுபட போகர் சித்தர் எளிய பரிகாரத்தை அருளிச் சென்றுள்ளார். இந்த நாக தோஷத்திற்கான பரிகாரத்தை போகர் சித்தர் தனது “போகர் 1200” நூலில் விரிவாக எளிதாக விளக்கியுள்ளார். இந்த பரிகாரம் செய்வதால் அந்த தோஷம் உள்ளவர் மட்டுமல்லாமல், அவரின் சந்ததிக்கே இந்த தோஷத்திலிருந்து காத்துக் கொள்ளும் பரிகாரமாகும்.
நாக தோஷம்:
ஜோதிடத்தின் படி நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் 2, 8ம் இடங்களில் ராகு - கேது பார்வை ஏற்பட்டிருந்தாலும் இந்த தோஷம் ஏற்படக் கூடும்.
பரிகாரம் - நாக சதுர்த்தி வழிபாடு :
இந்த பரிகாரத்தை நாக சதுர்த்தி எனும் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே செய்வது அவசியம்.
ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வருகின்ற வளர்பிறை கருட பஞ்சமிக்கு முந்தைய தினமான சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்த சிறப்பான நாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வதை நாகசதுர்த்தி விரதம், நாக சதுர்த்தி திதி என்கின்றனர்.
இந்த நாக சதுர்த்தி அன்று அரசமரத்திற்கு அடியில், ஒரு நாக சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அந்த நாக சிலை எப்படி இருக்க வேண்டுமென்றால், அதன் அடியில் நாக எந்திர பீடத்தில் மீது இருப்பது போலவும். அந்த நாகங்கள் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருப்பது போல உள்ள நாகத்தின் கருங்கல் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதால் நாக தோஷம் நம்மிடமிருந்து நிரந்தரமாக விட்டு செல்லும் என்கிறார் போகர்.
நாக சிலை செய்யும் முறை குறித்து போகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதாவது நாக சிலை இரண்டரை அடிக்கும் குறைவான உயரம் (பீடத்தை சேர்த்து), பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக் கொண்டிருப்பது போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதிஷ்டை செய்யும் தினத்தில் முழு விரதம் இருக்கலாம். அல்லது பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு பய பக்தியுடன் விரதமிருந்து செய்ய வேண்டும். இப்படி நாக தோஷம் உள்ளவர்கள் போகரின் குறிப்புகளின் படி நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு இருக்கும் நாக தோஷம் நிரந்தரமாக விட்டு நல்வாழ்வு வாழலாம்.
நாக வழிபாடு பலன்கள்
நாக தோஷம் தவிர்த்த மற்ற பிரச்னைகளை சந்திப்பவர்களும் நாக வழிபாடு நல்ல பலனை தரும். அதாவது ராகு கேது தோஷங்களால் திருமண தடை, குழந்தை பாக்கியம் பெறுவதலில் தடை உள்ளவர்கள் இந்த நாகங்களை வழிபாடு செய்வது நல்ல பலனைத் தரும். நாக சிலைக்கு அருகில் ஏதேனும் நீர் நிலைகள் இருந்தால் அந்த நீரை எடுத்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்யலாம்.
நாக ராஜா காயத்ரி மந்திரம்
தோஷ நிவர்த்திக்கு நாக ராஜா காயத்ரி மந்திரம் ஒரு சிறந்த தீர்வாகும்.
ஓம் சர்பராஜாய வித்மஹே
நாகராஜாய தீமஹி
தன்னோ னந்தஹ் ப்ரசோதயாத்
பொது பொருள்:
சர்பங்களுக்கெல்லாம் தலைவனான நாக ராஜனே உங்களை வணங்குகிறான். நித்தமும் உங்களை நினைக்கும் இந்த அடியேனுக்கு ஆசி வழங்கி அருள்புரிய வேண்டுகிறேன்.
இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக நாகராஜனின் அருளால் தோஷங்கள் விலகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள், குழந்தை செல்வம் இல்லாமல் தவிப்போர் இந்த மந்திரத்தை ஜபித்து பயன் பெறலாம்.
நாக தோஷம் நீங்கிட காயத்ரி மந்திரம் :
ஸ்ரீ ஆதிசேஷன் (நாக தோஷம் நீங்கிட ஜபிக்கவும்)
ஓம் ஸகஸ்ய சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தந்நோ நாக ப்ரசோதயாத்
ஸ்ரீகருடன் (சர்ப்ப தோஷம் நீங்கிட)
ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸீவர்ண பட்சாய தீமஹி
தந்நோ கருடஹ ப்ரசோதயாத்