Type Here to Get Search Results !

கன்னி ராசி புத்தாண்டு பலன்கள்-2023

 


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்)

கிரக நிலைகள் :

Ø  தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது

Ø  சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ)

Ø  பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன், சனி

Ø  சப்தம ஸ்தானத்தில் குரு

Ø  அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு

Ø  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் (வ) என கிரகநிலை இருக்கிறது.

கிரக மாற்றங்கள்:

Ø  29-03-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்

Ø  22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்

Ø  08-10-2023 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்

Ø  08-10-2023 அன்று கேது பகவான் ராசிக்கு மாறுகிறார்.

பொது பலன்கள் :

உங்கள் யோகாதிபதி சுக்கிரன் 5-ம் வீடான மகரத்தில் சஞ்சாரம் செய்யும்போது இந்தப் புத்தாண்டு பிறக்கிறது. எனவே மனதில் அசாத்தியத் துணிச்சல் பிறக்கும். எதையும் சாதிக்கும் வல்லமை தேடி வரும். எதிர்பார்த்துக் காத்திருந்த பணம் கைக்கு வரும். பேச்சில் இனிமை பிறக்கும். குடும்பத்தில் இருந்து வருத்தங்கள் நீங்கி அன்பும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். உங்கள் மனம் மகிழும்படி நடப்பார்கள்.

திருமண வயதில் இருக்கும் பிள்ளைகளுக்குத் திருமண வாய்ப்புகள் தேடிவரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் இருந்த பிரச்னைகள் நீங்கும். அத்தியாவசியச் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருக்கும். பயணங்கள் அடிக்கடி மேற்கொள்ள வேண்டிவரும். அவ்வப்போது பணப்பற்றாக்குறை வந்துபோகும்.

வியாபாரத்தில் சோர்ந்து இருந்த வியாபாரிகள் புத்துணர்ச்சி பெறுவார்கள். பழைய கடையைப் புதுப்பித்து வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். சலுகைகளை அறிவித்துப் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். கண்ணாடி, துணி, ரியல் எஸ்டேட், பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் வருவார்கள்.

உத்தியோகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். வர வேண்டிய சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் நட்பு பாராட்டுவார்கள். புது அதிகாரி உங்களுக்கு உரிய மரியாதையைத் தருவார். பதவியுயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சம்பளம் கூடும். பிப்ரவரி, மார்ச், ஆகஸ்டு மாதங்களில் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். கௌரவப் பதவிகள் கிடைக்கும்.

குருபகவான்  பார்வை   நன்மையா...? தீமையா...?

22.4.2023 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் நின்று உங்கள் ராசியைப் பார்ப்பதால் பணம் தேவையான அளவுக்கு வரும். பழைய சிக்கல்களைப் பேசி தீர்ப்பீர்கள். குடும்பத்தில் அனைவரோடும் மனம் விட்டுப் பேசுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சுவார்த்தை நல்லபடியாக முடியும். கடன்களை அடைக்க வழிபிறக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தருவார்கள். தாய்வழியில் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.

23.4.2023 முதல் குருபகவான் அஷ்டம குருவாக மேஷ ராசியில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் திடீர் செலவுகள் வந்து போகும். பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் வரும் சின்ன சின்ன பிரச்னைகளையெல்லாம் பெரிதாக்க வேண்டாம். சித்தர் பீடங்களுக்குச் சென்று வழிபடுங்கள். எதிர்பார்த்த அயல்நாட்டுப் பயணம் தாமதமாகும். இரத்த அழுத்தம், சளித்தொந்தரவு, இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

சனி சஞ்சாரம் சாதகமா...? பாதகமா...?

உங்கள் பூர்வ புண்ணியாதிபதி சனிபகவான் 5-ம் வீட்டிலேயே தொடர்வதால் சின்னச் சின்னப் பிரச்னைகள் இருந்த வண்ணம் இருக்கும். சின்னசின்ன மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் கடன் அடைக்க முடியாத நிலை இருந்துகொண்டு இருக்கும். 29.3.2023 முதல் 23.8.2023 வரை சனிபகவான் அதிசாரமாக 6 - ம் வீடான கும்ப ராசியில் சென்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் நிலைமை கட்டுக்குள் வரும். எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் வாய்க்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். நட்பு வட்டம் விரிவடையும்.

ராகு - கேது கொடுப்பார்களா..? கெடுப்பார்களா..?

8.10.2023 வரை 2--ம் வீட்டில் கேதுவும், 8-ல் ராகுவும் அமர்ந்திருப்பதால் மனதில் ஏதேனும் ஒரு கவலை இருந்துகொண்டே இருக்கும். பேசும் சொற்களில் கவனம் தேவை. வார்த்தைகளால் வம்பு வரலாம். 9.10.2023 முதல் வருடம் முடியும்வரை உங்கள் ராசிக்குள்ளேயே கேது பகவானும், ராசிக்கு 7-ம் வீட்டில் ராகுவும் அமர்வதால் ஆன்மிக விஷயங்களில் மனம் செல்லும். புனித யாத்திரை மேற்கொள்வீர்கள் திடீர் பயணங்கள் ஏற்படும். குடும்பத்தில் தேவையற்ற சந்தேகம் வந்து சிறு பிரச்னை ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

நட்சத்திரப் பலன்கள்

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:  இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக இடமாற்றம் ஏற்படலாம். அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும். அரசு விரோதத்தைச் சம்பாதிக்காம் இருப்பதில் கவனமாய் இருங்கள். தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள், கவனம் தேவை. தெளிவான ஆலோசனையும் முயற்சியும் உங்களை அனைத்து கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்றும்.

அஸ்தம்: இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம். நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை. வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை. கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும்.

சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல்பட்டே சிறிதளவு லாபம் காண்பர். தொழில் மாற்றம் அல்லது தொழிலில் சலனம் ஏற்படலாம். பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார். மாணவர் - ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத்துறை சுறுசுறுப்படையும். குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும், தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.

கன்னி ராசியினர் கவனமாக இருக்க வேண்டியவை

உறவுகளும் நட்புகளும் பாசத்துடன் வரும் சமயத்தில் சிலர் மறைமுகமாக பிரச்சனை ஏற்படுத்தி உறவுகளை சிதைக்கலாம். யாரையும் வார்த்தைகளால் காயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வயதில் முதியவர்கள், ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்டகாலமா சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தவர்களுக்கு உடல்நலத்தில் மேம்பாடு கிடைக்கும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை செய்துமுடித்தால், மேன்மை உண்டாகும்.

செய்யும் தொழில்ல உங்க நேரடி கவனத்துக்கும் நேர்மைக்கும் ஏற்ப வளர்ச்சி நிதானமும் அவசியம். மறைமுக எதிரிகள் பலம் அதிகரிக்கலாம், கையெழுத்துப் போடும் சமயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

வீண் ரோஷமும், வெட்டிக் கோபமும் தவிர்க்க வேண்டும். எந்தச் சமயத்திலும் எல்லாம் தெரியும் என்ற நினைவும், ஏனோதானோ செயலும் கூடவே கூடாது. கோப்புகளில் கையெழுத்திடும்போதும், பணத்தைக் கையாளும் சமயத்திலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் பிறர் மனம் நோகும்படி பேசவேண்டாம்.

மாணவர்களுக்கு அவசரமும் அலட்சியமும் கூடவே கூடாது. பாடங்களை உடனடியாக படிக்கறவர்கள் அதிக மதிப்பெண் பெறலாம். மேற்படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஆசிரியர்கள் ஆலோசனையை கேட்பது நல்லது. அவசரமும், குறுக்கு வழியும் தவிர்த்தாலே அனைத்திலும் வெற்றி பெறலாம்

கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் கணிசமாக வரும். பழைய நட்புகளை உதாசீனப்படுத்தாமல் இருப்பது, புதியவர்களை நம்பி ரகசியங்களைப் பகிராமல் இருப்பதும் நல்லது.

கழிவு உறுப்புகள், முதுகு தண்டுவட உபாதைகளை உடனே கவனிக்க வேண்டும். அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்னைகள்ல அலட்சியம் வேண்டாம்.

பரிகாரம் - வழிபாடு:   முருகர் மற்றும் பெருமாள் வழிபாடு தடைகளை நீக்கும். புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.

அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.